Paristamil Navigation Paristamil advert login

வெனிசுவேலா பூமியதிர்ச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

வெனிசுவேலா பூமியதிர்ச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

2 ஆடி 2026 வியாழன் 08:24 | பார்வைகள் : 199


வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியின் பேரழிவு ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின்படி, இதுவரை 11,267 பேர் காயமடைந்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள் இடம்பெயர்வு மற்றும் பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலை ஆகியவை நாட்டின் தற்போதைய தற்காலிக அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் 24ஆம் திகதி, வட-மத்திய வெனிசுவேலாவில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவிலான இரு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி அனர்த்தங்கள் அடுத்தடுத்து தாக்கின.

முதன்மை பூமியதிர்வுக்குப் பிறகு இதுவரை 782 பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன. தற்போது அவற்றின் தீவிரமும் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து, 26,000-க்கும் அதிகமான வெனிசுவேலா இராணுவம், பொலிஸார், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் 17,800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.