Paristamil Navigation Paristamil advert login

விஜயை கண்டு பொறாமை; பவன் கல்யாண் வெளிப்படை

விஜயை கண்டு பொறாமை; பவன் கல்யாண் வெளிப்படை

27 வைகாசி 2026 புதன் 09:35 | பார்வைகள் : 130


தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நான், 15 ஆண்டுகளாக தெரு தெருவாக அலைந்து வருகிறேன். என்னால் அது முடியவில்லை. தமிழக முதல்வர் விஜயை கண்டால் பொறாமையாகத் தான் இருக்கிறது,'' என, ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., - இடதுசாரி, வி.சி.க., ஆதரவுடன், முதல்வராக விஜய் பதவியேற்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கும் கொடுத்தார். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை கைப்பற்றியது, தேசிய அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஜனசேனா கட்சி கூட்டத்தில், அக்கட்சித் தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது கட்சி பெயரை குறிப்பிடாமல் பேசியதாவது: சமீப காலமாக, தமிழக அரசியலை நான் கவனித்து வருகிறேன்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஒரு கட்சி எந்தவித சிரமுமின்றி மிக எளிதாக வென்றிருக்கிறது. கட் அவுட், பேனர்களை பயன்படுத்தி வெற்றி பெற்று, முதல்வராக முடிகிறது. இதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு பொறாமையாகத் தான் இருக்கிறது.

நான், 15 ஆண்டுகளாக ஆந்திராவில் தெரு தெருவாக அலைந்து களத்தில் நின்று போராடி வருகிறேன். ஆனால், என்னால் அது போல வெற்றி பெற முடியவில்லை. ஒரு அரசியல் கட்சியை நடத்துவது என்பது லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைப்பது போன்ற கடினமான காரியம்.

அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, 'தமிழக முதல்வர் விஜயுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்' என, தன் ஆதரவாளர்களிடம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்திருந்தார். 'தமிழக அரசியல் சூழல் வேறு. ஆந்திர சூழல் வேறு' என்றும் அவர் குறிப்பிட்டார்.