Paristamil Navigation Paristamil advert login

மொராக்கோ கடற்பரப்பில் படகு விபத்து: இரு பிரெஞ்சு நபர்களை தேடும் பணி தீவிரம்!!

மொராக்கோ கடற்பரப்பில் படகு விபத்து: இரு பிரெஞ்சு நபர்களை தேடும் பணி தீவிரம்!!

26 வைகாசி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 196


மொராக்கோ நாட்டின் வடபகுதியிலுள்ள டாஞ்சியர் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த “ஸ்டெல்லா” என்ற படகு கடுமையான சிக்கலை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த இரு பிரெஞ்சு நாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக மொராக்கோ தேசிய கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.

அதிகாலை 2.15 மணியளவில் படகில் நீர் புகுந்ததாக அவசர தகவல் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் 3 மணியளவில் படகை விட்டு வெளியேறி சிறிய துணைப் படகில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தேடுதல் நடவடிக்கையின் போது, டாஞ்சியர் கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் காலியாக மிதந்துகொண்டிருந்த படகு மற்றும் உயிர்காக்கும் தெப்பம் மீட்கப்பட்டன. அதன் பின்னர் படகு அசிலா துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

தற்போது காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் கடற்படை மற்றும் வானூர்தி உதவி அணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவர்களிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய துணைப் படகு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் படகு மார்டினிக் தீவிலிருந்து பார்சிலோனா அல்லது மார்செய் நோக்கி ஐரோப்பிய துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்ததாக காணாமல் போனவர்களில் ஒருவரின் தந்தை அட்ரியன் டான்சே தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.