Paristamil Navigation Paristamil advert login

தென்னாப்பிரிக்கா தேசிய பூங்காவில் இரு சுற்றுலாப் பயணிகள் கொலை

தென்னாப்பிரிக்கா தேசிய பூங்காவில் இரு சுற்றுலாப் பயணிகள் கொலை

25 வைகாசி 2026 திங்கள் 18:30 | பார்வைகள் : 187


தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற குருகர் தேசிய பூங்காவில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

பூங்காவின் 100 ஆண்டுகால வரலாற்றில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என பூங்கா நிர்வாகம் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 71 வயது முதியவர் மற்றும் வயது குறிப்பிடப்படாத பெண் ஆகிய இரு சுற்றுலாப் பயணிகள், கடந்த புதன்கிழமை மாலை தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பவில்லை. இதனை அடுத்து தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பூங்காவிற்குள் உள்ள ஆற்றுப் பகுதியில் மற்ற சுற்றுலாப் பயணிகளால் இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதியவரின் உடலில் கத்திக் குத்துக் காயங்களும், பெண்ணின் உடலில் பலத்த காயங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் பயணித்த வாகனமும் காணாமல் போயுள்ளது. விசாரணையின்படி, அவர்கள் பயணித்த வாகனம் பூங்காவின் எந்தவொரு பிரதான நுழைவாயில் வழியாகவும் வெளியேறவில்லை.

எனினும், பூங்காவின் வேலி உடைக்கப்பட்டு, அதன் வழியே அண்டை நாடான மொசாம்பிக் நாட்டுக்குள் வாகனத்தின் டயர் தடயங்கள் சென்றிருப்பதை வனக்காவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொள்ளை மற்றும் வாகனக் கடத்தல் நோக்கத்திற்காக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா தேசிய பூங்காக்கள் நிர்வாகம் (SANParks) பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான பகுதிகளில் கூடுதல் வனக்காவலர்கள் (Rangers) மற்றும் கண்காணிப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துமீறல்களைக் கண்காணிக்கவும், முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கவும் அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்ப அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.