Paristamil Navigation Paristamil advert login

சூரிய மின் உற்பத்தி அனுமதிக்கு இனி, பி.எப்., வசூலிக்கக்கூடாது: விஜய்!

சூரிய மின் உற்பத்தி அனுமதிக்கு இனி, பி.எப்., வசூலிக்கக்கூடாது: விஜய்!

22 வைகாசி 2026 வெள்ளி 09:46 | பார்வைகள் : 107


கட்டட அனுமதியை தொடர்ந்து, சூரிய மின் உற்பத்தி திட்டத்திலும், முறைகேடான 'பி.எப்.,' வசூலை முற்றிலுமாக ஒழித்துள்ளது விஜய் அரசு. இதை வரவேற்றுள்ள தொழில்துறையினர், இதேபோன்ற நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை பிற துறைகளுக்கும் முதல்வர் விரிவுபடுத்த வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில், திராவிடக் கட்சிகளின் கடந்த கால் நுாற்றாண்டு கால ஆட்சியில், தமிழக அரசுத் துறைகளில் லஞ்சமும், ஊழலும் புரையோடியது. கட்டட அனுமதி உள்ளிட்ட எந்த துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தாலும், 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) பெயரில், 'ரேட் கார்டு' போடாத குறையாக, மக்களிடம் ஆட்சியாளர்கள் பணம் பறித்து வந்தனர், என்பது ஊரறிந்த உண்மை.

இதற்கு, புதிதாக பதவியேற்றுள்ள த.வெ.க., ஆட்சியில், முதல்வர் விஜய் முடிவு கட்டத் துவங்கி யிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கடந்த அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், கட்டட அனுமதிக்கு, மாறிமாறி 'ரேட் கார்டு' போட்டு பணம் பறிக்கப்பட்டு வந்தது. கடைசியாக, தி.மு.க., ஆட்சியில், சிஎம்டிஏ., மற்றும் டிடிசிபியில் கட்டட அனுமதிக்கு, சதுர அடிக்கு, 27 ரூபாய், 'பார்ட்டி பண்ட்'டாக பறிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் முதல்வர் விஜய் உத்தரவால், அந்த வசூல் கடந்த வாரம் முற்றிலுமாக நிறுத்தப் பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மின் துறையில் அடுத்த அதிரடி நிகழ்ந்திருக்கிறது. கடந்த காலங்களில், தி.மு.க., ஆட்சியின்போது அதாவது, ஆற்காடு வீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் சூரியமின் உற்பத்தி திட்டத்தில் அரசு அனுமதிக்கு ஒரு மெகாவாட்டுக்கு  5 லட்சம் ரூபாய் 'கட்சி நிதி' வசூலிக்கப்பட்டது.

அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில், நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலத்தில் அதுவே, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

பின்னர், தங்கமணி அமைச்சரான பிறகு, 15 லட்சம் ரூபாயாக கூடி யது; கடந்த தி.மு.க., ஆட்சியில் செந்தில் பாலாஜி பதவி காலத்தில் ஒரு மெகாவாட்டிற்கு 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

உதாரணமாக, ஒரு நிறுவனம் 10 மெகாவாட் மின் திட்டத்துக்கு அரசு அனுமதி கோரி விண்ணப்பித்தால், 2.5 கோடி ரூபாய் 'அழ' வேண்டும்.

முறைகேடாக இந்த தொகையை வசூலிக்க, மின்துறை அமைச்சர் அலுவலகத்தில் தனியாக ஒருவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நியமிக்கப்பட்டிருப்பர். 'பி.எப்., வந்துவிட்டது' என, அவர் துண்டு சீட்டு எழுதி 'இனிஷியல்' போட்டுக் கொடுத்ததும் அந்த கோப்பு நகரும்; அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வர். இந்த நடைமுறையானது, செந்தில்பாலாஜி பதவிக் காலத்தில், 'வாட்ஸ் ஆப்' மெசேஜ் ஆக மாற்றம் கண்டது.

ஏறத்தாழ 25 ஆண்டு களாக இருந்து வந்த இந்த ஊழல் நடைமுறை, த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

கடந்த சில நாட்களாக, சூரியமின் உற்பத்தி திட்டத்துக்கு, 'பி.எப்.,' எனும், 'பார்ட்டி பண்ட்' பணம் வசூலிக்காமலே அனுமதி வழங்கியுள்ளது விஜய் அரசு. விண்ணப்பங்கள் தகுதியானதாக இருப்பின் உடனடியாக அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த அதிரடி தொடர வேண்டும் என எதிர்பார்க்கும் தொழில்துறையினர், இதே போன்ற நேர்மையான அணுகுமுறை நடவடிக்கைகளை பிற துறைகளுக்கும் முதல்வர் விஜய் விரிவுபடுத்தினால் த.வெ.க., ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும் என்கின்றனர்.