Paristamil Navigation Paristamil advert login

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார்

22 வைகாசி 2026 வெள்ளி 06:26 | பார்வைகள் : 127


மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு உரிமை இல்லை. அணை கட்டுமான பணிக்காக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்,'' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

சாம்ராஜ்நகரின் கொள்ளேகாலில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாக, 177 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு உரிமை இல்லை. இதுகுறித்து மத்திய நீர் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேகதாது அணை திட்டத்திற்காக ஏற்கனவே நாங்கள் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பி சில கூடுதல் தகவல்களை கேட்டது.தற்போது திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளோம். விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், உடனடியாக பூமி பூஜை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.