ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
21 வைகாசி 2026 வியாழன் 11:15 | பார்வைகள் : 139
ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால், மீண்டும் மிகக் கடுமையான இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முறையான மற்றும் சரியான பதில்களைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் சில நாட்கள் மாத்திரம் வொஷிங்டன் பொறுமையுடன் காத்திருக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்ட்ரூஸ் கூட்டு விமானப் படைத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், தற்போதைய நிலைமை மிக ஆபத்தான எல்லையில் இருப்பதாகவும், இது எந்த நேரத்திலும் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற ஈரானுக்கு எதிரான கூட்டுத் குண்டுவீச்சுத் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆறு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதேவேளை, அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளமையானது எதிர்வரும் நவம்பர் மாத நாடாளுமன்றத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், போரை முடிவுக்குக் கொண்டு வர அவர் தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், இம்முறை பிராந்தியப் போர் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரீதியில் விரிவடையும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
அத்துடன், சர்வதேச எரிசக்திப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதற்காக 'பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபை' என்ற புதிய உத்தியோகபூர்வ அமைப்பையும் ஈரான் தோற்றுவித்துள்ளது.
தங்களுக்கு இணக்கமான நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்த நீரிணை ஊடாகச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், சீனாவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்படி சுமார் 4 மில்லியன் பேரல் எண்ணெயைச் சுமந்த இரு மாபெரும் சீனக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து வெளியேறியுள்ளன.
தற்போதைய இராஜதந்திர நகர்வுகளின்படி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து ரகசியச் செய்திகளைப் பரிமாறி வருகின்றன.
ஈரான் இந்த வாரம் ஒரு புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ள போதிலும், அதில் அமெரிக்கப் படைகளை வெளியேற்றுதல், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் மற்றும் போர்க்கால இழப்பீடு கோருதல் போன்ற ட்ரம்பினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிபந்தனைகளே மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் எனத் தனது இறுதி எச்சரிக்கையில் விவரித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan