Paristamil Navigation Paristamil advert login

ஆந்திராவில் ராஜ்யசபா எம்.பி.,யாகும் அண்ணாமலை? த.வெ.க., சார்பில் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு வாய்ப்பு!

ஆந்திராவில் ராஜ்யசபா எம்.பி.,யாகும் அண்ணாமலை? த.வெ.க., சார்பில் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு வாய்ப்பு!

21 வைகாசி 2026 வியாழன் 10:54 | பார்வைகள் : 125


தமிழகத்தில் ஒருவர் உட்பட, 25 ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவிலிருந்து தேர்வான நான்கு பேர், ஜார்க்கண்ட் - 2, குஜராத் - 4, ராஜஸ்தான் - 3, கர்நாடகா - 4, மத்திய பிரதேசம் - 3, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரமில் தலா ஒன்று என, ராஜ்யசபா எம்.பி.,களாக உள்ள 24 பேரின் பதவிக்காலம், ஜூன் 21 மற்றும் ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றதால், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அவர் ராஜினாமா செய்த எம்.பி., பதவிக்கான ஆயுள், 2028 வரை உள்ளது. இதனால், இந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். எனவே, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலோடு சேர்த்து, தமிழக ராஜ்யசபா இடத்திற்கும் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து நான்கு எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அங்கு ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன.

அவற்றில் ஓர் இடத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரான அண்ணாமலையை நிறுத்த, அக்கட்சி மேலிடம் தீர்மானித்து உள்ளதாகவும், இதுதொடர்பாக, ஆந்திரா கூட்டணி கட்சிகளுக்கு, டில்லி பா.ஜ., மேலிடம் தெளிவாக சொல்லி விட்டதாகவும், அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள எம்.பி., பதவிக்கு, ஆளும் கட்சியான த.வெ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் சார்பில், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் போட்டியில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு முதல்வர் விஜயை அழைத்து சென்ற விஷ்ணு ரெட்டி, அரசியல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் தனி செயலராக அறியப்படும் ஜெகதீஷ், முன்னாள் அமைச்சரும், லால்குடி தொகுதியில் தோல்வியை தழுவியவருமான கு.ப.கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் எழுந்த எதிர்ப்பால் பதவியை இழந்தாலும், டில்லியில் நன்கு அரசியல் தொடர்புகளை ஏற்கனவே வைத்துள்ளவரான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பெயரும் யூகத்தில் அடிபடுகிறது.

எனினும், இவர்களில் ஒருவர் தான் வேட்பாளரா அல்லது இவர்களை தாண்டி, திடீரென புதிய முகம் யாராவது அறிமுகமாகி, எம்.பி.,யாகி டில்லி வரப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் டில்லி வட்டாரங்களில் உருவாகி உள்ளது.