தமிழக அமைச்சரவையில் அதிமுக.,வை சேர்க்க எதிர்ப்பு!
21 வைகாசி 2026 வியாழன் 06:40 | பார்வைகள் : 119
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க., அதிருப்தி அணியினரை, தமிழக அமைச்சரவையில் சேர்க்க திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சரவையில் அ.தி.மு.க.,வினரை சேர்த்தால், ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்யப் போவதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மல்லுக்கட்ட தொடங்கி உள்ளன.
இது தொடர்பாக, அ.தி.மு.க., அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:
விஜயின் முடிவே இறுதியானது
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், 'எங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆதரவு கொடுங்கள்' என, த.வெ.க., தலைமையிடம் இருந்து அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு வந்தது. ஆனால், முதல்வர் பதவியை பொதுச்செயலர் பழனிசாமி கேட்டதால், கூட்டணி அமைக்க முடியவில்லை.
அதன்பின், பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க, சி.வி.சண் முகம், வேலுமணி ஆகி யோர் எங்கள் கட்சி எம். எல். ஏ.,க்களிடம் பேசினர். ஆதரவு கொடுத்தால் ஆட்சியில் பங்கு கொடுப்பதாக முதல்வர் விஜய் ஒப்புக் கொண்டார்.
ஆனால், விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலருக்கும், அ.தி.மு.க.,வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க விருப்பமில்லை.
எனவே தான், சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கே வந்து, அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை விஜய் சந்தித்த போது, அவருடன் சீனியர்கள் யாருமே வரவில்லை; ஆனாலும், விஜயின் முடிவே இறுதியானது.
எனவே, வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழல் வழக்கு இருப்பவர்களை விட்டு விட்டு, வேறு எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க, விஜய் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால், சண்முகமும், வேலுமணியும் அதை ஏற்கவில்லை. அத்துடன், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி தர முடியாது; நான்கு பேருக்கு தருகிறோம் என பேச்சு நடத்தினர்.
விருப்பமில்லை
கட்சியை உங்கள் தரப்பு கைப்பற்றிய பின், அமைச்சரவையில் இடம் கொடுக்கிறோம்' என்றனர். கடைசியாக, 'த.வெ.க.,வில் இணைந்து விடுங்கள்; இடைத்தேர்தலில் விஜய் உங்களை வெற்றி பெற வைப்பார்' என்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேச்சு நடத்தியதிலேயே, த.வெ.க.,வுக்கு எங்களை அமைச்சரவையில் சேர்க்க விருப்பமில்லை என்பது புரிந்தது.
ஆனால், அமைச்சரவையில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், 25 எம்.எல்.ஏ.,க்களும் சிதறி விடுவர். பழனிசாமி கைக்கு மொத்த கட்சியும் போய் விடும் என்பதால், விஜய் தரப்பில் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., தலைவர்களை வைத்தே, 'அ.தி.மு.க.,வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்' என, எங்களுக்கு எதிராக த.வெ.க., பேச வைக்கிறது.
இதனால் கோபமடைந்த சண்முகம், 'அவர்கள் போனால் போகட்டும்; நாங்கள் இருக்கிறோம். வி.சி.,யும், கம்யூ., கட்சிகளும் உங்களை நிம்மதியாக ஆட்சி நடத்த விட மாட்டார்கள். எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்து விட்டு, இப்போது அதை கொடுக்காமல் துரோகம் செய்யாதீர்கள்' என சண்முகமும், வேலுமணியும் விஜய் தரப்பிடம் கொந்தளித்துள்ளனர்.
அவர்களோ, 'உங்களை சேர்த்துக் கொண்ட பின், உங்கள் எம்.எல்.ஏ., பதவி போய் விட்டால் என்ன செய்வது; பேரம் நடந்ததாக டில்லி வழக்கு போட்டால் என்ன செய்வது? என தட்டிக்கழிக்க பார்க்கின்றனர்.
இந்நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த தி.மு.க., கூட்டணி கட்சிகளான வி.சி., முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க பேச்சு நடக்கிறது. அக்கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளனர். அவர்கள் வாயிலாக எங்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டி வெளியேற்ற பார்க்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan