Paristamil Navigation Paristamil advert login

படையினரின் வீரதீரச் செயலால் நக்சலிசம் ஒழிக்கப்பட்டது; அமித்ஷா பெருமிதம்

படையினரின் வீரதீரச் செயலால் நக்சலிசம் ஒழிக்கப்பட்டது; அமித்ஷா பெருமிதம்

20 வைகாசி 2026 புதன் 07:22 | பார்வைகள் : 119


பாதுகாப்பு படையினரின் வீரதீரச் செயலால், மார்ச் 31 காலக்கெடுவுக்கு முன்பே நாட்டில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல் மற்றும் உன்னத தியாகத்தின் காரணமாக, மார்ச் 31ம் தேதி காலக்கெடுவுக்கு முன்னதாகவே நாட்டில் இருந்து நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது.

2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, நான் முதன்முறையாக பஸ்தருக்கு வருகை தந்துள்ளேன். பஸ்தர் மக்களின் மத்தியில் எங்கு நோக்கினும், உற்சாகம், நம்பிக்கை மற்றும் எதிர்காலம் குறித்த உறுதிப்பாடு நிறைந்த ஓர் சூழலைக் காண முடிகிறது. அச்சம் நிறைந்த சூழலும், துப்பாக்கிகளின் நிழலில் வாழ வேண்டிய கட்டாயமும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன. ஒட்டுமொத்த பஸ்தர் பகுதியும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

பஸ்தர் பகுதி நக்சல் அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாறியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இங்கு சில தேதிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. முதலாவது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பாஜ அரசு அமைந்தது. ஏனெனில், மத்தியில் ஏற்கனவே மோடி அரசு ஆட்சியில் இருந்தாலும், இங்கு முன்னதாக காங்கிரஸ் அரசுதான் ஆட்சியில் இருந்தது.

நான் எவ்விதத் தயக்கமுமின்றி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் பாஜ அல்லாத பல மாநில அரசுகள் எங்களுக்கு ஆதரவளித்தன. ஆனால், சத்தீஸ்கரில் இருந்த காங்கிரஸ் அரசு, நக்சல் ஒழிப்புப் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இரண்டாவது தேதி 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி அனைத்து மாநிலங்களின் டிஜிபியுடன் கூட்டத்தை நடத்திய பிறகு, 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நாட்டை நக்சல் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுவிப்போம் என்று அறிவிக்கப்பட்டது.

நமது பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல் மற்றும் தியாகங்களின் விளைவாக, இலக்குத் தேதிக்கு முன்னரே, நாட்டிலிருந்து நக்ஸல் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.நக்சல் ஒழிப்புப் போரில் தங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். மேலும், நக்சல் பயங்கரவாதத்தின் காரணமாகத் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.'

எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை ஒரு தீர்வு அல்ல. ஒரு காலத்தில் துப்பாக்கிகளின் நிழல் மட்டுமே சூழ்ந்திருந்த இப்பகுதிக்கு, இப்போது மேம்பாடு வந்து சேரப்போகிறது.  நக்ஸல் இயக்கத்தின் காரணமாக, இப்பகுதி முழுவதும் இதுவரை மேம்பாட்டு வசதிகள் ஏதுமின்றிப் பின்தங்கியே கிடந்தது. அவர்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்கவில்லை; இலவச உணவு தானியத் திட்டத்தின் பயன்களோ, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியோ கிடைக்கவில்லை.

இந்த அனைத்து வசதிகளையும் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; இனிமேல் சிறிய தேவைகளுக்காகக்கூட ஒவ்வொரு பழங்குடியினரும் வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.  இனிமேல், நாட்டின் மேம்பாட்டுப் பயணத்தில் பெண்களும் சம பங்காளிகளாகத் திகழ்வார்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.