Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படாது - ஜனாதிபதி

இலங்கையில் இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படாது - ஜனாதிபதி

19 வைகாசி 2026 செவ்வாய் 17:42 | பார்வைகள் : 132


எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற 17ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் தமது உயிரை தியாயகம் செய்த இராணுவ வீரர்களுக்கும், அவர்களை நாட்டுக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கும் நாடு என்ற ரீதியில் எமது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர்.

அவர்களில் யுத்தம் செய்தமைக்கான நோக்கம் அமைதியான நாடு, அபிவிருத்தியடைந்த நாடு மற்றும் உலகில் வெற்றி பெறும் நாடு என்பதாகும். இவை அனைத்தையும் கொண்ட இலங்கையை நானும் எனது அரசாங்கமும் உருவாக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன். இவற்றில் எந்தவொரு விடயமும் எக்காரணத்துக்காகவும் கைவிடப்பட மாட்டாது. எவ்வாறிருப்பினும் அவர்களது அர்ப்பணிப்பினை இவ்வாறு நினைவு கூருதல் மாத்திரம் போதாது.

அவர்களது இறுதி இலக்கான ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். தற்போது நாட்டில் ஒற்றுமையை விரும்பாத ஒரு பாiதையும், ஒற்றுமையை அங்கீகரிக்கும் மற்றொரு பாதையும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் இரண்டாவது பாதையை மாத்திரமே தெரிவு செய்வோம். தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயரை ஸ்திரப்படுத்தியிருக்கின்றோம்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடாக இலங்கையை சர்வதேசத்தால் அங்கீகரிக்கச் செய்துள்ளோம். இதுவே யுத்தத்தில் உயிர்த்த நீத்த இராணுவத்தினரதும் விருப்பமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித சடலங்களாலும், இரத்த வெள்ளத்தினாலும், வெடி குண்டுகளாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அமைதியால் மாத்திரமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும்.

இராணுவ வீரர்கள் பிரிவினை வாதத்துக்கு எதிராகவே போராடினர். மாறாக மக்களுக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்டவொரு இனத்துக்கு எதிராகவோ அல்ல. வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களால் தான் இந்த பேரழிவை நாடு எதிர்கொள்ள நேர்ந்தது. இன்றைய சமூகத்தில் யுத்தம் சரியானதா இல்லையா என்ற விவாதமொன்று காணப்படுகிறது.

ஆனால் எமது விவாதம் இனியொருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவதாகவும். எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. சகல மக்களதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, சட்டம் அனைவருக்கும் சமமானதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் ஜனநாயகத்தை விரும்பாத ஜனாநாயக ஆட்சியில் பழக்கப்படாத ஒரு குழுவும் நாட்டில் காணப்படுகிறது. அவர்களையும் உள்ளடக்கி சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவோம். யுத்தம் கொடுத்த மோசமான அனுபவங்களிலிருந்து இலங்கையை முழுமையாக மீட்க வேண்டும். அதற்காக சகல பிரஜைகளுக்குமிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பாலத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டுள்ளோம். அதில் நாம் பெற வேண்டும் என்றார்.