Paristamil Navigation Paristamil advert login

இந்தியா நக்சல் இல்லாத நாடு; 50 ஆண்டு கால இழப்பு 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும்; அமித் ஷா

இந்தியா நக்சல் இல்லாத நாடு; 50 ஆண்டு கால இழப்பு 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும்; அமித் ஷா

19 வைகாசி 2026 செவ்வாய் 07:13 | பார்வைகள் : 126


இந்தியா நகசல் இல்லாத நாடாகிவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அவர் 50 ஆண்டு கால இழப்பு 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நடந்த விழாவில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது: நாடு 1971 முதல் மார்ச் 31, 2026 வரை நக்சலிசத்தின் பாதிப்பை சகித்துக் கொண்டது. இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று நான் பெருமையுடன் கூற முடியும்.

இது பல வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஒரு கனவாகும். ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் தியாகங்கள், 50 ஆண்டுகால ரத்தக் களரி, அச்சம் மற்றும் முடங்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 50 ஆண்டு கால இழப்பு 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும்.

நாட்டில் நக்சலிசத்தை எதிர்த்துப் போராடும்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்யாத பாதுகாப்புப் படையினர் எவரும் இருக்க முடியாது. பல வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்டுகளை கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டு, வன்முறைகளை கைவிட வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்வதை மோடி இலக்காக நிர்ணயித்துள்ளார்.

சாலைகள், ஊரக வளர்ச்சி, வங்கிகள், தபால் நிலையங்கள், எரிவாயு சிலிண்டர்கள், ஒவ்வொரு வீட்டிலும் குழாய் நீர், இலவச உணவு தானியங்கள், மின்சாரம் மற்றும் பிற அமை வசதிகளையும் உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும். சத்தீஸ்கர் முதல் ஜார்க்கண்ட், பீஹார் மற்றும் தெலுங்கானா வரையிலான நக்சல்களின் கோட்டைகளை பாதுகாப்பு படையினர் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மூலம் துடைத்தெறிந்துள்ளனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்