பழனிசாமியிடம் திடீர் மாற்றம்! அதிருப்தியில் உள்ளவர்களை அரவணைக்க முயற்சி
19 வைகாசி 2026 செவ்வாய் 04:14 | பார்வைகள் : 135
அ.தி.மு.க.,வில் தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து, அதிரடி காட்டி வந்த பொதுச்செயலர் பழனிசாமியிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிருப்தியில் உள்ளவர்களை அரவணைக்க முடிவு செய்து, 'கட்சியில் பிரச்னை இருந்தால், நாமே பேசி தீர்த்துக் கொள்வோம்' என அழைப்பு விடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குளறுபடிகளால், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவானது.
அந்த அணியில், 25 எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்ததோடு, த.வெ.க., அரசுக்கு பகிரங்க ஆதரவு அளித்துள்ளனர். மேலும், த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறவும் பேச்சு நடக்கிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழுவை கூட்ட, வேலுமணி அணி முயன்று வருகிறது. அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தால் போதும்; அவசர பொதுக்குழுவை கூட்ட முடியும்.
தற்போது, 3,850 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில், 770 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால், பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழுவை கூட்டி, அவரை மாற்ற முடியும்.
அதற்கான முயற்சிகளில் வேலுமணி அணி தீவிரமாக இறங்கி உள்ளது. இது குறித்து, சென்னையில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில், ஆலோசனை நடந்தது. அதில், 'பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து கையெழுத்து வாங்கிய பின், அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி, பொதுக் குழுவை கூட்ட வேண்டும்' என முடிவு செய்யப்பட்டது.
வேலுமணி தரப்பின் திட்டத்தை முறியடிக்க, பழனிசாமி தரப்பும் தீவிர ஆலோசனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட 28 மாவட்ட செயலர்களின் கீழ் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் தன் பக்கம் வரவில்லையென்றால், அவர்களையும் நீக்கலாமா என பழனிசாமி தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், 'கட்சியில் இருப்பவர்களை எல்லாம் நீக்கினால், பெரும் அதிருப்தி கிளம்பி விடும்; அதை செய்ய வேண்டாம்; மாவட்ட செயலர்கள் வாயிலாக பேசி பார்க்கலாம்' என, சிலர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
அதன்படி, மாவட்ட செயலர்களிடம் தொலைபேசி வழியாகவும், நேரிலும் பேசி வரும் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்களை தன் பக்கம் தக்கவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதேநேரத்தில், 'பொதுக்குழு கூட்டப்பட்டால், கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும். எனவே, இதை தடுத்தே ஆக வேண்டும்' என மூத்த நிர்வாகிகளும், அ.தி.மு.க., நலம் விரும்பும் தொழிலதிபர்களும் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு பலன் கிடைத்துள்ளது.
கட்சியில் பிரச்னை இருப்பின், அதை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம் என, அதிருப்தி அணியினருக்கு பழனிசாமி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அ.தி.மு.க., என்ற கம்பீரமான ஆல மரத்தின் நுனி கிளையில் சிலர் அமர்ந்து கொண்டு, அடி மரத்தையே வெட்டி சாய்க்க பார்க்கின்றனர். அவர்கள் தான் கீழே விழுந்து உருக்குலைந்து போவரே தவிர, ஆல மரத்திற்கு எந்த தீங்கும் வராது.
இன்று நான் பொதுச்செயலராக இருக்கிறேன். நாளை எனக்கு பின், தகுதியுள்ள வேறு ஒருவர், கட்சியை வழி நடத்துவார். இது தான் நம் கட்சிக்கான தனிப்பெருமை. மக்கள் விருப்பத்தையும், நம் பின்னடைவையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.
துாய சக்தி என சொல்லிக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு, தன்னை காப்பாற்றிக் கொள்ள, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கால்களில் விழுந்தது. பின், துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அ.தி.மு.க.,வின் முதுகில் குத்தி உள்ளது.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, 'டிசைன் டிசைனாக' கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், தி.மு.க., ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டன.
ஆனால், த.வெ.க., நம் கட்சிக்குள் குதிரை பேரத்தை நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒரு சில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் ஏற்றுக்கொள்ளவும் தெரியும்.
நம் கட்சியில் பிரச்னை இருப்பின், அதை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம் தான்.
ஒளிமயமான எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது. விட்டில் பூச்சியாக வீழ்ந்து விடாதீர்கள். அனைவரும் ஒன்று கூடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan