Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து - 08 பேர் படுங்காயம்

இத்தாலியில் பாதசாரிகள் மீது  கார் மோதி விபத்து - 08 பேர் படுங்காயம்

17 வைகாசி 2026 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 120


இத்தாலியின் வடக்குப் பகுதியிலுள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயத்திற்கு அருகில், அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் 'வியா எமிலியா' வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் வந்த கார், திடீரென பாதசாரிகள் நடக்கும் மேடைக்குள் புகுந்து மக்கள் மீது மோதியுள்ளது.

கார் மோதிய வேகத்தில் மக்கள் தூக்கி வீசப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த 05 பெண்களில் ஒருவரது இரு கால்களும் நசுங்கி துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதசாரிகள் மீது மோதிய பின்னர், கார் அங்கிருந்த கடை ஒன்றின் கண்ணாடி ஜன்னலில் மோதி நின்றது. இதன்போது காரில் இருந்து இறங்கிய சாரதி, கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்றுள்ளார்.

அவரைப் பிடிக்க முயன்ற லூகா சிக்னோரெல்லி என்ற நபர் மீது தாக்குதல் நடத்தியதில், அவருக்கு தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திகுத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், ஏனைய பொதுமக்களின் உதவியுடன் சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 31 வயதுடைய சந்தேகநபர் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலிய பிரஜையான சலீம் எல் கௌத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொருளாதாரப் பட்டதாரியான இவர் தற்சமயம் வேலையற்றவராக உள்ளார்.

இது குறித்து மொடெனா மாவட்ட அதிபர் ஃபப்ரிசியா ட்ரியோலோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,

"சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டில் மனச்சிதைவு கோளாறு காரணமாக மனநல மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் எந்தவொரு தகவலும் இன்றி மறைந்திருந்தார்."

இச்சம்பவம் "மிகவும் தீவிரமானது" என இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி  வர்ணித்துள்ளார். அதேவேளை, இத்தாலியின் தீவிர வலதுசாரி துணைப் பிரதமர் மேட்டியோ சர்வினி, சந்தேகநபரை "இரண்டாம் தலைமுறை குற்றவாளி" என விமர்சித்துள்ளார்.


இது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலா அல்லது மனநல பாதிப்பால் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்து இத்தாலியப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.