Paristamil Navigation Paristamil advert login

சோழர் கால ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது நெதர்லாந்து

சோழர் கால ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது நெதர்லாந்து

17 வைகாசி 2026 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 124


நெதர்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆணைமங்கலம்' செப்பேடுகள், தாய்நாட்டிற்கு   திரும்ப உள்ளன.  சோழர் காலத்தை சேர்ந்த இந்த செப்பேடுகள், பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா காலனித்துவ ஆட்சியில் இருந்த போது , நமது நாட்டில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க   சிற்பங்கள், கலைநயம் மிக்க பொருட்கள், வரலாற்று சான்றுகள் ஆகியன பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டன.   பிரதமர் மோடி,மத்தியில் ஆட்சிக்கு வந்த  பிறகு, அவற்றை தாய்நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளில்  தீவிரம் காட்டப்படுகிறது. அந்த வகையில் ஏராளமான பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஐந்து நாடுகள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்சை தொடர்ந்து  ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நெதர்லாந்து மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை அவர் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து, 11ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்  பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான விஜயதுங்க வர்மன் தன் தந்தையின் பெயரில் நாகையில் சூடாமணி பன்ம புத்த மடாலயத்துக்காக ஆனைமங்கலத்தை சுற்றி உள்ள 26 கிராமங்களை தானமாக கொடுத்தது குறித்து ராஜேந்திர சோழன் 21 செப்பேடுகளில் தாமிரத்தால் சாசனம் செய்தார்.இவற்றில் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டு உள்ளன. சமஸ்கிருதத்தில் உள்ளவற்றில் சோழ மன்னர்களின் பரம்பரை பறறி குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழில் உள்ள செப்பேடுகளில் சோழ வம்சம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. 21 செப்பேடுகளும் சோழர்களின் புலிச்சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சமஸ்கிருத உரை பொறிக்கப்பட்ட முத்திரை வளையத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.இதன் பிறகு ராஜேந்திர சோழனின் பேரனான முதலாம் குலோத்துங்க சோழனால் புத்த மடாலயத்துக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன் காலத்தில் உறுதி செய்யவும், மேலும் தானத்தை அளிக்கவும் 3 ஏடுகளை கொண்ட 2வது தொகுதி செப்பேடுகள் அமைந்துள்ளன.

ராஜராஜ சோழன் பிறப்பித்த உத்தரவை, அவரது மகனான முதலாம் ராஜேந்திர சோழன் பிற்காலத்தில் நிரந்தரமாக பாதுகாக்கும் பொருட்டு செப்புப் பட்டயங்களில் செதுக்க செய்தார். மொத்தம் 30 கிலோ எடையுள்ள இந்த ஆவணத்தில் 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள் உள்ளன.

18 ம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் பகுதி டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்த செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு பணியாற்றிய புளோரெண்டியாஸ் காம்பர் என்ற அதிகாரி,  இதனைபெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இவை லைடன் பல்கலை நூலகத்தின் ஆசியப் பிரிவில் சேர்க்கப்பட்டு, நூறாண்டுகளுக்கு மேலாக அங்கு பாதுகாக்கப்பட்டு வந்தத. இவை அறிஞர்களின் ஆய்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க  செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என 2012 ம் ஆண்டு முதல்  தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  தீவிரமாக தூதரக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2022ம் ஆண்டு நெதர்லாந்துஅரசு தனது காலனித்துவ கால கலைபொருட்களை திருப்பி அளிக்கும் புதிய கொள்கையை  இறுதி செய்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2023 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச குழு, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே பேச்சு நடத்த ஏற்பாடு செய்தன. இதில் நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்த செப்பேடுகள்  இந்தியாவுக்கு திருப்பி தரப்பட வேண்டும் என இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அந்த செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் திருப்பி அளிக்கப்பட்டது.

பிரதமர் மகிழ்ச்சி

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான நிகழ்ச்சியில் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் முன்னிலையில் நான் பங்கேற்றேன்.இந்த சோழர் செப்பேடுகள் 21 பெரிய செப்பேடுகளையும்,3 சிறிய செப்பேடுகளையும் கொண்ட ஒரு தொகுப்பாகும். இவை பெரும்பாலும் உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலான வாசகங்களை கொண்டு உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன் வாய்மொழியாக அளித்த ஒரு உறுதிமொழியை, அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் முறைப்படுத்தி ஆவணப்படுத்திய நிகழ்வை இந்த செப்பேடுகள் விவரிக்கின்றன. மேலும் இவை சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன. சோழர் குறித்தும் அவர்களின் பண்பாடு குறித்தும் அவர்களின் கடல்சார் வல்லமை குறித்தும் இந்தியாவில் வாழும் நாங்கள் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.நெதர்லாந்து அரசுக்கும், 19ம் நூற்றாண்டு முதல் இந்த செப்பேடுகளை பாதுகாத்து வரும் லைடன்  பல்கலைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.