Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பயணி - அதிர்ச்சியில் அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பயணி - அதிர்ச்சியில் அதிகாரிகள்

15 வைகாசி 2026 வெள்ளி 17:44 | பார்வைகள் : 128


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (15) முற்பகல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 60 வயதுடைய இந்தியப் பிரஜை என்பதுடன், அவர் தொழில் ரீதியாக ஒரு புவியியலாளர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக எவ்வித சோதனைகளுமின்றிப் போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே, அங்கு கடமையில் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, கட்டாரின் தோஹா நகரைச் சென்றடைந்துள்ளார்.

அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 664 என்ற விமானம் மூலம் இன்று (15) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியை  அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதிலிருந்த இரண்டு சான்றிதழ் ஆவணங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பயணியும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் இவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.