Paristamil Navigation Paristamil advert login

லத்வியாவின் பிரதமர் எவிகா சிலினா திடீர் பதவி விலகல்!

லத்வியாவின் பிரதமர் எவிகா சிலினா திடீர் பதவி விலகல்!

15 வைகாசி 2026 வெள்ளி 10:09 | பார்வைகள் : 160


ஐரோப்பிய நாடான லத்விய வான்பரப்பிற்குள் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகியுள்ளார்.அரசியல் பகுப்பாய்வு

இதனால், அங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே தற்போதைய கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துள்ளது.

கடந்த மே 07 ஆம் திகதி, ரஷ்யாவை இலக்கு வைத்து உக்ரேனால் ஏவப்பட்ட மூன்று ஆளில்லா விமானங்கள், சிக்னல் கோளாறு காரணமாக திசைமாறி லத்விய வான்பரப்பிற்குள் நுழைந்துள்ளன. இதில் ஒரு ட்ரோன் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மற்றொன்று 'ரெசெக்னே' நகருக்கு அருகிலுள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தின் மீது மோதியுள்ளது.

மூன்றாவது ட்ரோன் லத்விய வான்பரப்பிற்குள் நுழைந்து பின்னர் வெளியேறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் ஏற்படாத போதிலும், அரசாங்கத்தின் பாதுகாப்புப் பொறிமுறை மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட வேகம் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சு மெத்தனமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிய லத்விய பிரதமர் சிலினா, கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் அன்றீஸ் ஸ்ப்ரட்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சரின் 'புரோகிராசிவ்ஸ்' கட்சி ஆளும் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த லத்விய பிரதமர் சிலினா, நேற்று வியாழக்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

தனது பதவி விலகல் குறித்துக் கருத்துத் தெரிவித்த எவிகா சிலினா,

"பாதுகாப்புத் துறைக்கு ஒரு வலுவான அமைச்சரை நியமிக்க முயன்றபோது, அரசியல் சூழ்ச்சியாளர்கள் இந்த நெருக்கடியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நான் இராஜினாமா செய்கிறேன், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

லத்வியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 05 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காகச் செலவிடும் நிலையில், சமூகத்தின் மீதான பொறுப்புக்கூறல் மிக உயர்வாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து லத்விய ஜனாதிபதி எட்கார்ஸ் ரின்கேவிக்ஸ் இன்று (15) வெள்ளிக்கிழமை முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் காரணமாக லத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகள் ஏற்கனவே கடும் பாதுகாப்புப் பதற்றத்தில் உள்ள நிலையில், இந்த அரசியல் மாற்றம் ஐரோப்பிய அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.