Paristamil Navigation Paristamil advert login

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு; தி.மு.க., அரசாணைக்கு புத்துயிர்

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு; தி.மு.க., அரசாணைக்கு புத்துயிர்

17 ஆனி 2026 புதன் 10:46 | பார்வைகள் : 162


தமிழக நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பு செய்து முந்தைய தி.மு.க., அரசு பிறப்பித்த உத்தரவை, தற்போதைய த.வெ.க., அரசு செயல்படுத்தாது என்கிற எண்ணத்தில் அதிகாரிகள் இருந்தனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் - பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், திட்டங்கள், சிறப்பு திட்டங்கள், தரக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அனைத்து பிரிவு தலைமை அலுவலகங்களும் சென்னையில் இருக்கின்றன. கீழ்நிலை அலுவலர்கள் பணி நிமித்தமாக சென்னை செல்வதால் கால விரையம் ஏற்படுகிறது.

பொதுப்பணித்துறை, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியத்தில் இருப்பதைபோல், நெடுஞ்சாலைத்துறையிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. தலைமை பொறியாளருக்கு கீழ் பணியிடங்கள் ஒதுக்கி, ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வருமென, சட்டசபை தேர்தலுக்கு முன், மார்ச் 13ல் அரசாணை வெளியிடப்பட்டது.

சிறப்பு திட்டங்கள் பிரிவு கலைக்கப்பட்டது. நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு, திட்டங்கள், பெருநகரம் போன்ற பிரிவுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்பிரிவுகளில் பணிபுரிந்தவர்கள், வெவ்வேறு பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டனர். புதிதாக பணியிடம் தோற்றுவிக்கவில்லை.

முந்தைய தி.மு.க., ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு என்பதால், புதிய அரசு அதை செயல்படுத்த வாய்ப்பில்லை என அதிகாரிகள் நினைத்திருந்தனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கவனத்துக்கு அரசாணை விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, செயல்பாட்டுக்கு கொண்டு வர அவர் அறிவுறுத்தியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி, அரசாணையில் குறிப்பிட்டிருந்த பணியிடங்களில் நேற்று பொறுப்பேற்றனர்.