Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த இந்திய கப்பல் திஷா

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த இந்திய கப்பல் திஷா

17 ஆனி 2026 புதன் 06:48 | பார்வைகள் : 265


ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய கொடி ஏந்திய எரிவாயுவை சுமந்து வரும் 'திஷா' கப்பல் பாதுகாப்பாக அப்பகுதியை கடந்துள்ளது. இது, பிற இந்திய கப்பல்களின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. வரும், 19ல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா - ஈரான் இடையே உடன்பாடு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே இந்திய கொடி ஏந்திய, எல்.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு நிரப்பப்பட்டுள்ள திஷா என்ற வணிகக் கப்பல், ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தது.

இது, இதே கடல் வழியை பயன்படுத்தி இந்திய துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள, இந்திய மற்றும் வெளிநாட்டு கொடியுடன் கூடிய மற்ற 34 வணிக கப்பல்களுக்கும், பாதுகாப்பான போக்குவரத்துக்கான நம்பிக்கையை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மொத்தம், 62,370 டன் எல்.என்.ஜி., எரிவாயுவுடன் வரும் திஷா கப்பல், குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் துறைமுகத்தை நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது-.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள முக்கிய 16 இந்திய கப்பல்களில், எட்டு கப்பல்கள் யூரியாவையும், நான்கு கப்பல்கள் டை - அம்மோனியம் பாஸ்பேட்டையும், மூன்று கப்பல்கள் கந்தகத்தையும், ஒரு கப்பல் அம்மோனியாவையும் ஏற்றி வருவதாக மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.