செப்டம்பரில் அண்ணாமலையின் புதிய கட்சி!
16 ஆனி 2026 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 136
பா.ஜ.,வில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கி உள்ள அண்ணாமலை, செப்டம்பர் 14 ல் புதிய கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அதன் பின் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக இருந்தபோது, தி.மு.க., எதிர்ப்பு அரசியல், துணிச்சலான பேட்டிகள் என பரபரப்பாக செயல்பட்டு, இளைஞர்களை கவர்ந்தவர் அண்ணாமலை. பின், அந்த பதவியில் இல்லை என்றாலும், சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பாக பணியாற்றினார்.
இந்த நிலையில் தான், பா.ஜ.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை. விலகிய கையோடு இமயமலை சென்றார். ஏற்கனவே ஒப்பு கொண்ட கல்லுாரி விழாவில் பங்கேற்பதற்காக ஒருநாள் மட்டும் கோவை வந்த அவர், மீண்டும் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனிடையே, அவர் தொடங்கிய 'வீ தி லீடர்' அமைப்பில், ஒவ்வொரு நாளும் ஏராளமான இளைஞர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தான், புதிய கட்சி குறித்து அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களுடன் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் திரும்பியதும், கட்சியில் சேரும் இளைஞர்களை, அரசியலில் தீவிரமாக செயல்படும் வகையில் பயிற்சி அளிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். வரும் 19 முதல் 21 வரை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலையின் ஆதரவாளரும், பா.ஜ., ஊடகப் பிரிவு முன்னாள் செயலருமான விஷ்ணுபிரசாத் கூறியதாவது:
இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கும் வகையில், மாவட்டம் தோறும் விரைவில் பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன. அதற்குள் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பின், செப்.,14 ல் புதிய கட்சியின் பெயர், கொள்கைகள், செயல்பாடுகளை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அப்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் அறிவிக்க முடிவு செய்துள்ளார். இதில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு உட்பட்டோராக இருப்பர். புதிய கட்சி அறிவிப்பை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan