Paristamil Navigation Paristamil advert login

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து - 17 பாடசாலை மாணவர்கள் காயம்

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து - 17 பாடசாலை மாணவர்கள் காயம்

15 ஆனி 2026 திங்கள் 17:34 | பார்வைகள் : 221


கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 17 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வேன் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன விபத்தில் வேன் சாரதியும் பலத்த காயமடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில், தனியார் பஸ் வண்டியானது கண்டியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் அதற்கு எதிர் திசையில் பயணித்துள்ளது.

இதன்போதே இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியுள்ளன.

காயமடைந்தவர்கள் அனைவரும் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.