Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டின் போது இளம் பெண் உயிரிழப்பு!

பிரேசிலில் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டின் போது இளம் பெண் உயிரிழப்பு!

15 ஆனி 2026 திங்கள் 13:37 | பார்வைகள் : 145


பிரேசிலில் கைவிடப்பட்ட ரயில் பாலம் ஒன்றில் இருந்து, கயிறு கட்டி குதிக்கும் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டில் ஈடுபட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், கயிறு சரியாக பொருத்தப்படாததால் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரேசிலின் சாவ் பாலோ நகருக்கு அருகில் உள்ள, 'ஸ்கெலிட்டன் பாலம்' என அழைக்கப்படும் கைவிடப்பட்ட ரயில் பாலத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அந்த பெண் குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அங்கிருந்த ஊழியர்கள் அவரை பாலத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதைக் காண முடிகிறது. அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் தரையில் கிடந்த கயிற்றைச் சுட்டிக்காட்டி, "கயிற்றைப் பாருங்கள்" என்று கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

விசாரணையை மேற்கொண்டு வரும் சாவ் பாலோ பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரியா டான்டாஸ் லெவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பாதுகாப்பு கயிறு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கத் தவறியதே இந்த உயிரிழப்பிற்கு காரணம். மேலும், இந்த இடத்தில் இவ்வாறான ஆபத்தான விளையாட்டுகளை நடத்துவதற்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக ஆறு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே 27, 32 மற்றும் 42 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.