Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸை இந்தியா தேர்வு செய்தது மிகப்பெரிய கவுரவம்; அதிபர் மேக்ரான்

பிரான்ஸை இந்தியா தேர்வு செய்தது மிகப்பெரிய கவுரவம்; அதிபர் மேக்ரான்

15 ஆனி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 310


இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் காட்சிப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்குக் கிடைத்த பெருமை என்று அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான தனது 5 நாள் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரதமர் மோடி நேற்றிரவு நீஸ் நகரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமரை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் அன்போடு வரவேற்றார்.

தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், மூலதன நிதியங்களையும் ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' என்ற நிகழ்வை இருநாட்டு தலைவர்கள் கூட்டாக துவங்கி வைத்தனர். முன்னதாக, முதலீட்டாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

துவக்க நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது; பிரதமர் மோடியை நீஸ் நகருக்கு வரவேற்பதிலும், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் முதலாவது 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வைத் தொடங்கி வைப்பதிலும் மிகவும் பெருமை அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் பிரான்ஸ்-இந்தியா புத்தாக்க ஆண்டு துவங்கி வைத்தோம்.

அப்போது, இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறதா? என்பது கேள்வியாக இருக்கவில்லை; மாறாக, இந்தியாவோடு இணைந்து யார் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கப் போகிறார்கள்? என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் இங்கு காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் கூட்டாண்மைகளை உருவாக்கவும் பிரான்ஸ் நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளது எங்களுக்குக் கிடைத்த பெருமையாகும்.

சில நாட்களுக்கு முன்புதான், நீங்கள் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றீர்கள். உங்களது உறுதியான செயல்பாடுகள், உங்களது நாட்டின் வலிமை மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது, இவ்வாறு அவர் கூறினார்.