Paristamil Navigation Paristamil advert login

மிகவும் கவலைக்கிடமான நிலையில் சுரேஷ் சலேவின் உடல்நிலை - மனைவி தகவல்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் சுரேஷ் சலேவின் உடல்நிலை - மனைவி தகவல்

14 ஆனி 2026 ஞாயிறு 11:33 | பார்வைகள் : 288


சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட அருந்தவில்லையென அவரது மனைவி விசனம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை அவரது மனைவியும் மகனும் பார்வையிட்ட பின்னர் சலேவின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுரேஷின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. முன்னர் படுக்கையில் உட்கார்ந்தபடியேனும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட அவருக்கு சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது இரண்டு கைகளும் வீங்கியுள்ளன. தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகள் காரணமாக உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது. பேசுவதற்குக்கூட பெரும் முயற்சி எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. வார்த்தைகளை உச்சரிப்பதற்கே சிரமப்படுகிறார்.

நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவே தெரிகிறது. இருப்பினும் மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இங்கு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் அவரை கருணையுடனும் அக்கறையுடனும் கவனித்து வருகின்றனர். அவரைக் காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்தையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால் சுரேஷின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகவே உள்ளது. இன்று வரை சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட அருந்தவில்லை. எந்தவித உணவையும் உட்கொள்ளவில்லை. தற்போதும் அவர் அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். சுரேஷ் உயிரிழக்கும் வரை காத்திருந்து பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.

சுரேஷின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போதைக்கு மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். எனினும் சுரேஷின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றது என்பதை தான் என்னால் கூறமுடியும் என்றார்.