வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை நிரந்தரமாக நிறுத்த மின் வாரியம் முடிவு
14 ஆனி 2026 ஞாயிறு 09:29 | பார்வைகள் : 277
வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை நிரந்தரமாக நிறுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கு இணையான தரத்தில், உள்நாட்டு நிலக்கரியை தடையின்றி வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, 5,120 மெகா வாட் திறனில், ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில், 800 மெகா வாட் திறன் உடைய, 'வட சென்னை 3' மின் நிலையத்தில், சமீபத்தில் தான் வணிக மின் உற்பத்தி தொடங்கியது.
மின் நிலையங்களின் முழு திறனில் தினமும் சராசரியாக, 80 - 85 சதவீத மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தினமும் சராசரியாக, 75,000 டன் நிலக்கரி தேவை. இது, ஒடிஷா மாநிலத்தில் உள்ள, மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு, கப்பலில் தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது.
கடந்த, 2022 - 23ல் நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தங்களின் தேவையில், 6 சதவீதம், வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்ய, மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது.
தமிழக மின் வாரியம், 2022 - 23ல், 15.80 லட்சம், 2023 - 24ல், 6.25 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டில், 3 லட்சம் டன் இறக்குமதி செய்தது. டன் விலை சராசரியாக, 8,000 ரூபாய் - 11,000 ரூபாயாக இருந்தது. வெளிநாட்டு இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெளிநாட்டு நிலக்கரியில் குறைந்த அளவில் அதிக வெப்பம் கிடைப்பதுடன், வெளியேறும் சாம்பல் அளவு, 10 சதவீதமாக உள்ளது. இது, நம் நாட்டு நிலக்கரியில், 40 சதவீதம் உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து, நிலக்கரி அனுப்புவது திடீரென குறைந்து விட்டதால், நெருக்கடி ஏற்படுகிறது.
இது போன்ற காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி வாங்கப்படுகிறது. வட சென்னை 3, துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலக்கரியை சேர்த்து பயன்படுத்தும் வகையில், இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்வதால், தேவையற்ற விமர்சனங்கள் எழுகின்றன. எனவே, இனி நிலக்கரி இறக்குமதியை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த விபரத்தை தெரிவித்து, வெளிநாட்டு நிலக்கரி தரத்திற்கு இணையாக, உள்நாட்டு நிலக்கரியை தடையின்றி தொடர்ந்து வழங்க, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan