Paristamil Navigation Paristamil advert login

மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் வழிபாடு!

மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் வழிபாடு!

13 ஆனி 2026 சனி 07:27 | பார்வைகள் : 149


டில்லி பயணத்தை முடித்து கொண்டு மங்களூரு சென்ற முதல்வர் விஜய், கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அம்மனுக்கு வெள்ளி வாள் காணிக்கையாக செலுத்தினார்.

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் இக்கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சாமி தரிசனம் செய்து இருக்கிறார். சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும், கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசித்தனர்.

இந்நிலையில், டில்லி பயணம் முடிந்து புறப்பட்ட முதல்வர் விஜய் மங்களூரு விமான நிலையம் சென்றடைந்தார். கொல்லுார் சென்ற அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த அவர், சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார். அம்மனுக்கு ஒரு கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாள் காணிக்கையாக செலுத்தினார். முதல்வர் விஜய் வருகை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.