Paristamil Navigation Paristamil advert login

இந்திய மாலுமிகள் மீதான தாக்குதல்கள்; அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய மாலுமிகள் மீதான தாக்குதல்கள்; அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்

13 ஆனி 2026 சனி 05:14 | பார்வைகள் : 173


ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை வெளியுறவு அமைச்சகத்திற்கு நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் கடல் பகுதியில் மூன்று நாட்களுக்குள் 3 கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு  48 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக அமெரிக்க தூதர் ஜேசன் மீக்ஸை இந்தியா வரவழைத்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு  கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸ் இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல்கள் குறித்து அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்கெனவே மூன்று இந்தியர்களின் துயரமான மற்றும் தவிர்க்கக்கூடிய உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது குறித்து அமைச்சகம் மீண்டும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மேலும், ஒரு இக்கட்டான நேரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிராந்தியத்தில் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை இவை சீர்குலைக்கின்றன.

இந்தியாவின் கடும் கவலைகளைத் தனது அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும், அப்பகுதியில் செயல்படும் அமெரிக்கப் படைகள் பொதுமக்கள் உயிர் இழப்பைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதை உறுதி செய்யுமாறும் அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளரிடம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.