Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை அச்சுறுத்தவுள்ள எல்-நினோ நிலை குறித்து எச்சரிக்கை

இலங்கையை அச்சுறுத்தவுள்ள எல்-நினோ நிலை குறித்து எச்சரிக்கை

12 ஆனி 2026 வெள்ளி 15:12 | பார்வைகள் : 207


உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் எல்-நினோ நிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஓரளவு குறையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், எல்-நினோ நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்காலத்தில் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ்:

"இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கத்தைக் கருதினால், தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவதற்கு இந்த எல்-நினோ நிலைமை காரணமாக அமைகிறது. எவ்வாறாயினும், எல்-நினோ தாக்கத்தினால் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவை நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தற்போது எல்-நினோ நிலைமை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. எனவே, எதிர்கால வானிலை அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு விசேடமாக நினைவூட்டுகிறோம். அத்துடன், நிலவும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் வரும் நாட்களில் மழைவீழ்ச்சி குறைவடைவதோடு வெப்பநிலையும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.