மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் - கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்
12 ஆனி 2026 வெள்ளி 13:33 | பார்வைகள் : 147
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கியதால், 40 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 606 என்ற இந்த விமானம், இன்றையதினம் அதிகாலை 01.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ-330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சமயத்தில் அப்பகுதியில் நிலவிய மின்னலுடனான காலநிலை காரணமாக, விமானத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் சிட்னி நோக்கிய பயணத்தைக் கைவிட்ட விமானி, அதிகாலை 01.40 மணியளவில் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு ஏ-330 விமானத்தைப் பயன்படுத்தி, அந்தப் பயணியரை இன்று காலை 06.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானப் பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan