Paristamil Navigation Paristamil advert login

ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்காமல் விட மாட்டேன்!: முதல்வர் விஜய்

ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்காமல் விட மாட்டேன்!: முதல்வர் விஜய்

2 ஆனி 2026 செவ்வாய் 05:04 | பார்வைகள் : 164


ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்காமல் விட மாட்டேன்; கொஞ்சம் நேரம் கொடுங்கள்; நிச்சயம் செய்து காட்டுகிறேன்; அதை தவிர வேறு வேலை எனக்கு இல்லை,'' என, திருச்சியில் நடந்த தமிழக வெற்றிக் கழக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்திற்கு, த.வெ.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி மைதானத்தில் நேற்று மாலை நடந்த கூட்டத்திற்கு, த.வெ.க., பொதுச்செயலரும், அமைச்சருமான ஆனந்த் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சரும், வாரிய தலைவருமான கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

பின்னர், மக்களுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் விஜய் பேசியதாவது:

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளும் என் இரு கண்கள். திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை. வரும் இடைத்தேர்தலில், நான் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள்.

ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால், ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டில் போய் புலம்பும் நிலை உள்ளது.

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., முதல் தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட, த.வெ.க., அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்., உடன் என்னை ஒப்பிடவில்லை. ஆனால், 1977ல் போடாத ஓட்டுகளை, 2026ல் மக்கள் த.வெ.க.,வுக்கு போட்டுள்ளனர். இன்னும் கொஞ்சம் ஆதரவு அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வருங்காலத்தில் எல்லா தேர்தலிலும், மக்கள் ஆதரவை முழுமையாக பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த ஆட்சியில் நடக்கும் நன்மைகளை, எல்லா மக்களும் கண்கூடாக பார்ப்பீர்கள்.

யார் எந்த உயரத்துக்கு போனாலும், கிண்டல், கேலி இருக்கத்தான் செய்யும். தயவு செய்து விமர்சனத்தை நிறுத்தி விடாதீர்கள்; அதை தொடருங்கள். நீங்கள் தான் என் சக்தி. நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள்; நான் மக்களுக்கு நல்லது செய்து கொண்டே இருக்கிறேன்.

நான், 'கோட் சூட்' அணிவதை விமர்சிக்கின்றனர்; ஏன் போடக்கூடாதா? ஆதிக்க சக்திகள் தான் கோட் சூட் போட வேண்டுமா;?நான் என்ன கலர் கலரா, 'சூட்' போட்டேனா; இரண்டு கலர் தான். எல்லாவற்றிலும் கருப்பு, வெள்ளையாக இருப்பேன் என்பதற்காக, அந்த உடையை அணிகிறேன். நான் ஏன் கருப்பு போடுகிறேன்? அது யாரை குறிக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

எல்லாவற்றுக்கும் இப்படி விளக்கம் கொடுத்து, நசநசன்னு பேசுபவன் நான் இல்லை. மக்கள் என்னிடம், 'இந்தாப்பா விஜய், எங்களுக்காக உழைக்கும் வேலையை நீ பாரு... உன்ன பத்தி பேசுறவங்கள நாங்கள் பாத்துகிறோம்' என்று சொல்கின்றனர்.

தி.மு.க.,வும் மற்றும் பலரும் சேர்ந்து, இந்த விஜய் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என, கடைசி ஐந்து நாள் கூத்து கட்டினர். இப்போதும், த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி. இடையில் யாருக்கும் எந்த வேலையும் இல்லை. தேர்தலுக்கு முன்னதாகவே அவர்களுக்கு வேலை இல்லை; இப்போது சுத்தமாக வேலை இல்லை.

எந்த அல்லு சில்லும் உள்ளே வந்து, நம்மை தடுக்க நினைத்து, 'டேமேஜ்' ஆனால், நிர்வாகம் அதற்கு பொறுப்பில்லை ராஜா. என்னை ஏளனமாக பேசுவதாக நினைத்து, அவர்களே ஆப்பு வைத்துக் கொள்கின்றனர். தி.மு.க., நம்மை எதிர்க்க எதிர்க்க, நமக்கு அனைத்தும் நன்மை தான்.

த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், இன்றைய இளம் தலைமுறையை கவர, ஆங்கிலமும், தமிழும் கலந்த அறிக்கை விடுகின்றனர். 'ரியாலிட்டி'யை மறந்து, 'ரீல்ஸ்' போடுகின்றனர். அந்த காமெடியும் தி.மு.க.,வில் நடக்கிறது.

சட்டசபையில் என்ன நடக்கிறது என இளைஞர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ரீல்ஸ் போட்ட கூட்டமெல்லாம் தற்போது நியூஸ் பார்க்கின்றனர். அது, எனக்கு சந்தோஷம் தான். ஆனால், த.வெ.க.,வினரை தற்குறி என்று சொல்கின்றனர். அவர்கள் தான் உங்களின் அரசியல் வாழ்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

உண்மையை சொன்னால், தி.மு.க.,வுக்கு கசக்கும். மக்களை நீங்கள் புரிந்து வைத்திருந்தால், அவர்களை தவறாக பேசி இருக்க மாட்டீர்கள். கவர்ச்சியில் மயங்கி, த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டனராம். உங்களுக்கு ஓட்டு போட்டால் மக்கள் நல்லவர்கள்; எனக்கு ஓட்டு போட்டால் தற்குறியா?

எனக்கு வாயில் நல்லா வருது; வேண்டாம். அண்ணாதுரை துவங்கிய கட்சியை அடிமை கூடாரமாக்கி விட்டு, இப்போது 'உண்மையை சொல்லு உடன்பிறப்பே' என்கின்றனர்.

தி.மு.க., இப்படி ஆனதற்கு, வெளியில் காரணம் தேடாதீர்கள்; உங்கள் குடும்பத்துக்குள் கேளுங்கள்; சொகுசாக இருக்கும் உங்கள் குடும்பத்துக்குள் கேளுங்கள் என்று தான் உடன்பிறப்புகள் சொல்கின்றனர்.

அதை புரிந்து கொள்ளாமல், என்னையும், த.வெ.க.,வினரையும் தவறாய் பேசுகிறீர்கள். மக்களை பேசினால், விஜய் கேள்வி கேட்பான். விஜய் தான் மக்களின் உண்மையான ஒரே பிரதிநிதி. இது தான் நிஜம்.

என்னையும், மக்களையும் ஒரு காலமும் பிரிக்க முடியாது. எனவே, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து, மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள். பதவி போன கடுப்பில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார். 'டாஸ்மாக்'கில் ஊழல் செய்த பைல்களை, 'குளோஸ்' செய்ய அலைந்தீர்கள். ஆனால், நான் வந்ததும், டாஸ்மாக்கை குளோஸ் செய்தேன்.

விவசாய கடனில் முடிந்ததை தள்ளுபடி செய்தேன். நீங்கள் தான், நிதி தொடர்பான எல்லா கதவுகளையும் மூடி விட்டீர்களே; அதை சரி செய்ய வேண்டாமா?

சட்டம் - ஒழுங்கு சரியில்லை என மாறி மாறி கூவுகின்றனர். மாடல் அரசில் ஊர், தெரு விடாமல் போதை கலாசாரம் கொட்டி கிடந்தது. அதை துவக்கத்திலேயே சரி செய்திருந்தால், இத்தனை பெண் குழந்தைகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றையும் செய்து விட்டு, பழியை என் மீது போடுகிறீர்கள்.

நீங்கள் என்ன பழி போட்டாலும், மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய செயலை நான் செய்வேன். அதற்காகவே, சிங்கப்பெண் படையை அடுத்த வாரம் துவங்க உள்ளேன்.

தி.மு.க., ஆட்சியில் இல்லாத போது, அவர்களை ஏன் விமர்சிக்கிறேன் என்று சிலர் கேட்பர். வேரில் வெண்ணீரை ஊற்றி விட்டு போனவர்களை வெளிச்சம் போட்டு காட்டி தான் ஆக வேண்டும்.

குதிரை பேரம் செய்கிறேன் என கதை அடிக்கின்றனர். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் சேர்ந்து திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்து, கொள்ளை அடிக்க திட்டம் போட்டனர். அப்போதே நீங்கள் துார்ந்து போன சக்தியாகி விட்டீர்கள்; மக்களை விட்டு போய் துார சக்தியாகியும் விட்டனர். மக்கள் ஆதரவு இருக்கும் போது, எதற்கு பேரம்?

இந்த தேர்தலில் ஜாதி, மதம், காசுக்கு ஓட்டு வாங்கும் கலாசாரத்தை உடைத்துள்ளேன். எல்லாருக்குமான ஆட்சியாக என் ஆட்சி இருக்கும். மதச்சார்பற்ற கொள்கை, மாநில உரிமை, நதி நீர் உரிமை, சமூக நீதியில் சமரசம் இல்லை.

ஊழல், லஞ்சம் இல்லாத அரசை கொடுப்பேன். ஒரு நாளில் நடக்க அது, 'மேஜிக்' இல்லை; கொஞ்சம் நேரம் கொடுங்கள்; செய்து காட்டுகிறேன். ஒரு நாள் அதை நடத்தி வைப்பேன். எனக்கு இதை தவிர வேறு வேலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, த.வெ.க.,வுக்கு மட்டும் 5,000 பேரை வைத்து பொதுக் கூட்டம் நடத்த, தி.மு.க., அரசு நெருக்கடி கொடுப்பதாக விஜய் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். ஆனால், விஜய் முதல்வராகியும், அதே, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி, பொதுக் கூட்டம் நடந்துள்ளது. இதன் வாயிலாக, தேர்தல் பிரசாரத்தின் போது, வேண்டுமென்றே தி.மு.க., அரசை விஜய் விமர்சித்தாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

திருச்சிக்கு முதல்வர் விஜய் வருகை குறித்து பேசிய த.வெ.க., நிர்வாகி கு.ப.கிருஷ்ணன், 'ரோடு ஷோ எதுவுமில்லை' என்றார். ஆனால், விமான நிலையத்தில் இருந்து வரும் போதும், பொதுக் கூட்டத்தை முடித்து கிளம்பும் போதும், சாலை மார்க்கமாக சென்ற முதல்வர் விஜய், 'ரோடு ஷோ' வாயிலாக மக்களை சந்தித்தார்.

திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று, திருச்சி மாவட்ட மக்களுக்கும், கிழக்கு தொகுதி மக்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். திருச்சிக்கு வந்த அவரை, கட்சியினர், பொது மக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்காக நேற்று மதியம் 2:45 மணிக்கு தனி விமானத்தில் விஜய் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து, பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிரசார வேனில் விஜய் சென்றார். வயர்லெஸ் ரோடு, மன்னார்புரம், டி.வி.எஸ்., டோல்கேட் வழியாக சென்ற அவரை, வழி நெடுகிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கானோர் சாலையோரங்களில் நின்று வரவேற்பு அளித்தனர்.

கூட்டம் நடந்த மைதானத்துக்கு மாலை 4:10 மணிக்கு விஜய் வந்தார். கூட்டத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் செல்லும் வழியில், பல்லாயிரக்கணக்கான மக்கள், விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.