Paristamil Navigation Paristamil advert login

ஜுன் மாத மாற்றங்கள்!!

ஜுன் மாத மாற்றங்கள்!!

31 வைகாசி 2026 ஞாயிறு 23:07 | பார்வைகள் : 320


  • எரிவாயு விலையில் 4.8% குறைவு

ஜூன் மாதம் 1ம் திகதி முதல் இயற்கை எரிவாயுவின் விலை 4.8 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை மாற்றத்துடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள சுமார் 6 மில்லியன் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. அவர்களின் மாதாந்திர கட்டணம் சராசரியாக 1.26 யூரோக்கள் வரை குறையும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

  • குறைந்தபட்ச ஊதியம் (SMIC) உயர்வு

பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலை உயர்வின் தாக்கத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியம் 2.41 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முழுநேர பணியாளர்களின் மாத சம்பளம் 1,443.11 யூரோக்களிலிருந்து 1,477.93 யூரோக்களாக அதிகரிக்கிறது. இதனால் மாதத்திற்கு 34.82 யூரோக்கள் கூடுதலாக கிடைக்கும்.

  • மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசின் உதவித் திட்டங்கள்

எரிபொருள் செலவின அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான உதவித் திட்ட விண்ணப்பங்கள் ஜூன் 1 முதல் திறக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் ஏப்ரல் மாதத்தில் வாங்கிய எரிபொருளுக்கு லிட்டருக்கு 20 சென்ட் உதவித்தொகையும், விவசாயிகள் வாங்கிய GNR எரிபொருளுக்கு லிட்டருக்கு 15 சென்ட் திருப்பிச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

▪️ கட்டுமானத் துறைக்கு சிறப்பு நிதியுதவி

BTP (கட்டுமான) துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ஜூன் 8ம் திகதி முதல் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்க முடியும். மே மாதத்தில் பயன்படுத்தப்பட்ட GNR எரிபொருளுக்கு லிட்டருக்கு 20 சென்ட் வீதம் உதவி வழங்கப்படுவதுடன், நிறுவனம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 4,000 யூரோக்கள் வரை பெற முடியும்.

▪️ அரசு ஊழியர்களுக்கான பயணப் படி உயர்வு

சில அரசு ஊழியர்களுக்கான கிலோமீட்டர் அடிப்படையிலான பயணப் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக தனியாக புதிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

▪️ மாணவர்களுக்கு 500 யூரோக்கள் இடம்பெயர்வு உதவி

Parcoursup தளத்தின் மூலம் தங்கள் கல்வி வட்டாரத்திற்கு வெளியே உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கான 500 யூரோக்கள் மதிப்புள்ள இடம்பெயர்வு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 1ம் திகதி முதல் தொடங்கியுள்ளன. பள்ளி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இந்த நிதியுதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.