Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் குடைச்சல் கொடுத்தால் ஆப்பரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும்

பாகிஸ்தான் குடைச்சல் கொடுத்தால் ஆப்பரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும்

31 வைகாசி 2026 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 880


ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை. நம் நாட்டுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், 'ஆப்பரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும்,'' என, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்தாண்டு ஏப்ரலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பினர். அவர்களுக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயிற்சி அளித்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நம் ராணுவம் பதிலடியில் இறங்கியது. இதற்காக ராணுவம், விமானப்படை, கடற்படை ஒருங்கிணைந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற நடவடிக்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ஈடுபட்டன.

இதில், பாக்., எல்லைக்குள் இருந்த பயங்கரவாத கட்டமைப்புகளை நம் படைகள் தரைமட்டமாக்கின; 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நம் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், பாக்., கெஞ்சியதை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின், 150-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை. தற்போது நீடிப்பது தற்காலிக போர் நிறுத்தம் மட்டும் தான். முப்படைகளும் ஆப்பரேஷன் சிந்துார் 2.0 நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. அத்தகைய சூழல் ஏற்படாமல் பாக்., பார்த்துக்கொள்ள வேண்டும்.

ராணுவத்தை முழுமையாக நவீனமயமாக்கி வருகிறோம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான படையை உருவாக்கி வருகிறோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீரருக்கும் ட்ரோனை பறக்கவிட தெரிந்திருக்கும்.

கிழக்கு, மேற்கு எல்லை பகுதிகளில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரே தளபதியை நியமிக்கும் பணிகள் சரியான பாதையில் செல்கின்றன. இது குறித்த ஆலோசனை நிறைவடைந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது போர்க்களங்கள், 24 மணி நேரமும் மிக வெளிப்படையானதாக மாறிவிட்டன. எனவே, எல்லையில் படைகளை குவிப்பதிலும், வீரர்களையும், மக்களையும் பாதுகாப்பதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.