Paristamil Navigation Paristamil advert login

வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி.?

வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி.?

29 வைகாசி 2026 வெள்ளி 16:23 | பார்வைகள் : 113


கட்லெட்டை குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்.அதிலும் காய்கறிகளை கொண்டு ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் வெஜிடபுள் கட்லெட் பற்றி சொல்லவா வேண்டும், அதிலும் வீட்டிலேயே செய்து கொடுத்தால் அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபுள் கட்லெட்டை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் :

பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 1 டேபிள் ஸ்பூன்
பிரெட் கிரம்ப்ஸ் - 1/2 கப்
கொத்தமல்லி இலைகள் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு தேவையானவை :
மைதா மாவு - 1/4 கப்
பிரெட் கிரம்ப்ஸ் - 2 கப்
எண்ணெய்

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
பின்னர் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உருளைக்கிழங்கை தவிர பொடியாக நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 நிமிடங்கள் வரை காய்கறிகளை சமைக்கவும்.
பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கெட்ச்அப், பிரெட் க்ரம்ப்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

தற்போது அதிலிருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி லேசாகத் தட்டையாக்கி தட்டில் தனியாக வைக்கவும்.
 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் கிரம்ப்ஸை எடுத்துக் கொள்ளவும்.
 

தற்போது அடுப்பில் வாணலி வைத்து கட்லெட் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து தட்டி வைத்துள்ள கட்லெட்டை எடுத்து மைதா மாவில் நனைத்து பின்னர் அதை பிரெட் கிரம்ப்ஸில் போட்டு பிரட்டி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் கட்லெட் சாப்பிட ரெடி...