Paristamil Navigation Paristamil advert login

சோனியா, ராகுலை சந்திக்காத முதல்வர் விஜய்; மேகதாது அணை பிரச்னை தான் காரணமா?

சோனியா, ராகுலை சந்திக்காத முதல்வர் விஜய்; மேகதாது அணை பிரச்னை தான் காரணமா?

29 வைகாசி 2026 வெள்ளி 12:57 | பார்வைகள் : 259


மேகதாது அணை பிரச்னை பூதாகரமாகி உள்ளதால், முதல்வர் விஜய் தன் டில்லி பயணத்தின்போது, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக 2 நாள் பயணமாக டில்லி சென்ற விஜய்,  பிரதமர் மோடியை சந்தித்தார். பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார். தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை, டில்லியில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இதன் பின், காங்., தேசிய தலைவர்களை, முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக சொல்லப்பட்து. ஆனால், யாரையும் சந்திக்காமல், தன் டில்லி பயணத்தை திடீரென முடித்து கொண்ட முதல்வர், தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார். டில்லி பயணத்தில் காங்., தலைவர்களை விஜய் சந்திக்காததன் பின்னணி பற்றி, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

கர்நாடகா சட்டசபை தேர்தல், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க உள்ளது. கடந்த தேர்தலின் போது, காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. தமிழக அரசின் தொடர் சட்ட நடவடிக்கையால், அதில் முட்டுகட்டை விழுந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்த உள்ளதாக அறிவித்தார். தற்போது, முதல்வராக பொறுப்பேற்க உள்ள சிவகுமார், மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக தீவிரம் காட்டுவார்.

பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். துணை முதல்வர் சிவகுமார் செயலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நேரத்தில், காங்., தலைவர்களை முதல்வர் விஜய் டில்லியில் சந்தித்தால், அவர்களிடம் மேகதாது அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும். அதனால், அரசியலில் தேவையற்ற நெருக்கடி ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில், ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மேகதாது அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நேரத்தில், காங்., தலைவர்கள் சந்திப்பை முதல்வர் விஜய் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டார்.

இவ்வாறு காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டில்லியில், ஜூன் 11ல், 'நிடி ஆயோக்' ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தக் கூட்டம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், இதில் பங்கேற்க விரும்புகிறார். எனவே, குறுகிய கால இடைவெளியில், அவர் மீண்டும் டில்லி செல்ல உள்ளார். அப்போது, அமைச்சர்கள் சிலரும் முதல்வருடன் செல்ல உள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியது முதல், செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வருகிறார் முதல்வர் விஜய். எப்படியும் அவரை பேட்டி அளிக்க வைத்து விட வேண்டும் என, டில்லி பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின், முதல்வர் விஜய் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பியபோது, பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டனர். முதல்வரை கட்டாயப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர். சிலர் 'ஹலோ மிஸ்டர் விஜய்' என்றும், சிலர் 'ஹலோ விஜய்' என்றும், இன்னும் சிலர் 'விஜய் விஜய்' என்றும் கூவி அழைத்தனர். தமிழ்நாடு இல்ல வளாகத்தில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில், வெளியாட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததே இதற்கு காரணம். தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை, எவ்வித சிரமமும் இன்றி முதல்வரின் பயணம் இருந்தது. அதற்கான பாதுகாப்பை, டில்லி மாநில போலீசார் வழங்கினர். அதேநேரம், தமிழ்நாடு இல்லத்திற்குள் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. தமிழக ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. தமிழ்நாடு இல்ல வளாகத்திற்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்ற விபரம், அவர்களுக்கு தெரியவில்லை. உரிய முறையில் அறிவுறுத்தல் வழங்காததே குளறுபடிக்கு காரணம்.