Paristamil Navigation Paristamil advert login

மம்தா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் அம்பலம்!

மம்தா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் அம்பலம்!

29 வைகாசி 2026 வெள்ளி 09:04 | பார்வைகள் : 328


மேற்கு வங்கத்தில், முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ஆண்கள் பலர் அபகரித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை அக்கட்சி நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பல முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து  முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியதாவது:மம்தா ஆட்சியில், 'லஷ்மிர் பந்தர்' திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவு பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாயும், பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்களுக்கு 1,700 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. புதிய ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 3,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. முந்தைய ஆட்சியில், லஷ்மிர் பந்தர் திட்டத்தில் முறைகேடு நடந்ததுள்ளது.

இந்த திட்டத்தில் உள்ள 30 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியும், முர்ஷிதாபாதைச் சேர்ந்த ராதர்காட் கிராம பஞ்சாயத்து உறுப்பினருமான ரகிபுல் ஷேக் மற்றும் அவரின் மனைவி இருவரும் இந்த திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

மேற்கு மிட்னாபூரைச் சேர்ந்த மற்றொரு திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி உத்தம் குமார் சாவும் இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக உதவித்தொகை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, திரிணமுல் காங்., நிர்வாகி ரகிபுல் ஷேக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'என் வங்கி கணக்கில் லஷ்மிர் பந்தர் திட்டத்தின் கீழ் பணம் வந்தது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'பணம் வந்தால் வரட்டும்; அதை ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள்' என, எங்கள் கட்சியைச் சேர்ந்த பல மூத்த நிர்வாகிகள் கூறினர்.

'முந்தைய ஆட்சி ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எனவே, அதன் பலன்களை நாங்கள் பெற்றுக்கொண்டோம். முறையாக விசாரித்தால் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்' என்றார்.

ரகிபுல் ஷேக்கை கைது செய்த போலீசார், முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய திரிணமுல் காங்., ஆட்சியில் நடந்த ஊழலை, அக்கட்சி நிர்வாகியே ஒப்புக்கொண்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.