Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா  தாக்குதல்

28 வைகாசி 2026 வியாழன் 06:31 | பார்வைகள் : 155


அமெரிக்கப் படைகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என சந்தேகிக்கப்படும் ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் 27.05.2026 இரவு புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்த அந்த அதிகாரி, இதேபோன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஈரானின் பல ஆளில்லா ட்ரோன் விமானங்களையும் அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுடன் ஆரம்பமாகி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலக எரிசக்தி விலைகளை வேகமாக உயர்த்தியவாறு மூன்று மாதங்களாகத் தொடரும் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளை ஈரானும் ஓமானும் கூட்டாக நிர்வகிக்கும் என்று ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (புதன்கிழமை) அதிகாலையில் நிராகரித்தார்.

அந்த கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா செயற்படுவதாக ஈரான் குற்றம் சுமத்தும் பின்னணியில், கடந்த திங்கட்கிழமையும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியிருந்தது.

கடல் கண்ணிவெடிகளை விதைக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் இதில் அடங்குவதாகவும், அவற்றால் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.