Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்தில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு

நியூசிலாந்தில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு

20 சித்திரை 2026 திங்கள் 11:44 | பார்வைகள் : 283


நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் அந்நாட்டின் தலைநகரான வெலிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிங்டன் நகரில் திங்கள்கிழமை  ஒரு மணித்தியாலத்துக்குள் 77 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது முன்னொருபோதும் இல்லாத ஒரு சாதனை அளவாகும் என நகரின் மேயர் ஆண்ட்ரூ லிட்டில் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் நீரில் மூழ்கியுள்ளன. மண்சரிவினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெலிங்டன் விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரோரி புறநகர்ப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வானிலை மிகவும் மோசமாக உள்ளது. வெள்ளத்தின் வேகம் கார்களையே நகர்த்தும் அளவுக்கு வலுவாக உள்ளது. பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என மேயர் ஆண்ட்ரூ லிட்டில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் தாக்கிய 'வையாணு' சூறாவளியின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளேயே இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அமைச்சர் மார்க் மிட்செல் தெரிவிக்கையில், திங்கட்கிழமை இரவு வானிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதால், மக்கள் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 'வெலிங்டன் சிட்டி மிஷன்' தற்காலிகத் தங்குமிடங்களை அமைத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் பொது மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.