Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் உரிமையை தோற்கடித்த திமுக, காங்.,: இபிஎஸ் சாடல்

பெண்களின் உரிமையை  தோற்கடித்த திமுக, காங்.,: இபிஎஸ் சாடல்

20 சித்திரை 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 187


திமுகவும் காங்கிரசும் தோற்கடித்தது, மசோதாவை தோற்கடிக்கவில்லை, பெண்களின் உரிமையை தோற்கடித்தனர். வஞ்சக எண்ணம் படைத்த கட்சிகளுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார்.

கரூரில் நடந்த பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது;

எதிரி நம்மை சற்று பலவீனமாக நினைக்கிறார், அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பலவீனப்பட்டு ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டே ஓடிப்போய்விட்டார். எதிரியை ஓட ஓட விரட்டுங்கள்.   திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது என்று ஸ்டாலின் சொல்கிறாரே ஒழிய திமுக வலிமையானது என்று சொல்லவில்லை.

கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு என்று நிறைய போட்டிருக்கிறீர்கள், இதெல்லாம் அதிமுக அரசு விசாரித்து, பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது இருந்த இபிஎஸ் வேறு, இப்போது இருக்கும் இபிஎஸ் வேறு. தமிழக மக்களை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் தான் தேர்தலில் போட்டி. ஒரு குடும்பம்தான் சுரண்டுகிறது. யார் குடும்பம், ஸ்டாலின் குடும்பம்.

அதிமுக 33% இடஒதுக்கீடு கொடுக்க முயற்சித்த கட்சி. திமுக வாய் அளவில் பேசுவார்கள், ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.  லோக்சபாவில்  மசோதாவை இப்போது கொண்டுவந்தார் பிரதமர் மோடி.  இண்டி கூட்டணியினர் பெண்களை உதாசீனப்படுத்தி மசோதாவை தோற்கடித்தனர். இன்று 33% இடஒதுக்கீடு கிடைத்திருக்கும், ஆனால் திமுகவும் காங்கிரசும் தோற்கடித்தது, மசோதாவை தோற்கடிக்கவில்லை, பெண்களின் உரிமையை தோற்கடித்தனர். வஞ்சக எண்ணம் படைத்த கட்சிகளுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

இங்கிருக்கும் முன்னாள் அமைச்சர், எந்த இலாகா கொடுத்தாலும் ஊழல் செய்வதுதான் தொடர்கதை. எல்லோரும் இலாகாவை சிறப்பாக நடத்த எண்ணுவார்கள். ஆனால், இங்கிருப்பவர் மட்டும் என்னவெல்லாம் ஆட்டையைப் போடலாம் என்று சிந்திப்பார். போக்குவரத்துத் துறை கொடுத்தால் அதில் என்ன அடிக்கலாம், கலால்துறை கொடுத்தால் அதில் என்ன முறைகேடு செய்யலாம் என்று கொள்ளை அடிப்பவர்தான் இப்பகுதி நபர்.

கரூர் தொகுதியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்கும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் ஜனநாயகம் ஓங்க வேண்டும். இதற்கு நீங்கள் தேர்தலில் எடுக்கும் முடிவு, சரியான முடிவாக இருக்க வேண்டும்.

மணல் கொள்ளை குறித்து நேற்று பிரதமர் மோடி மணல் கொள்ளை பற்றி பேசினார். திமுக ஆட்சியில் இருக்கிறது, அதிகாரிகள் துணை நிற்கிறார்கள், எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். சாட்டிலைட் மூலம் பார்க்கிறார்கள். எங்கெங்கு மணல் அள்ளப்படுகிறது. லாரிகளின் நம்பர் எல்லாம் பதிவாகியிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசு துணையுடன் சாட்டிலைட் பதிவு எடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.