Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் மிரட்ட வரும் அஜித்தின் பில்லா....

மீண்டும் மிரட்ட வரும் அஜித்தின் பில்லா....

16 சித்திரை 2026 வியாழன் 15:53 | பார்வைகள் : 189


தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்வது ஒரு பெரிய ட்ரெண்டாக, சொல்லப்போனால் ஒரு புதிய கலாச்சாரமாகவே மாறிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா, படையப்பா, முத்து தொடங்கி, சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை குவித்து வசூல் மழை பொழிந்த தளபதி விஜய்யின் கில்லி, கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் புதிய வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்த ரீ-ரிலீஸ் வரிசையில் அடுத்ததாக இணையவுள்ள படம் தான் தல அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பில்லா.

கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'பில்லா' திரைப்படம், அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு புதிய மேக்கிங் மற்றும் விஷுவல் ஸ்டைலை அறிமுகப்படுத்தியது. 1980-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பழைய பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இது உருவாகியிருந்தது.

பழைய கதையாக இருந்தாலும், அஜித்தின் அல்டிமேட் ஸ்டைலான நடிப்பு, ஹாலிவுட் தரத்திலான நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, மிலனின் கலை இயக்கம் மற்றும் காஸ்ட்யூம் டிசைன் என ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருந்தது

தற்போதுள்ள ரசிகர்களின் தற்கால திரை அனுபவத்தை பூர்த்தி செய்யும் வகையில், பில்லா திரைப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப முழுமையான 4K ரெசல்யூஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலியமைப்புடன் டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருந்த பில்லா தீம் மியூசிக் மற்றும் பாடல்கள், இப்போது டால்பி அட்மாஸில் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கிறது.

இப்படத்தில் டேவிட் பில்லா மற்றும் வேலு என இரு மாறுபட்ட வேடங்களில் அஜித் மிரட்டியிருப்பார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நமிதா நடித்திருந்தனர். குறிப்பாக நயன்தாராவின் திரைப்பயணத்தில் அவரை ஒரு கிளாமர் மற்றும் முன்னணி ஆக்‌ஷன் நட்சத்திரமாக உயர்த்தியதில் பில்லாவிற்கு மிக முக்கிய பங்குண்டு. இவர்களுடன் பிரபு, ரகுமான், சந்தானம் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த நிலையில் வருகிற மே1ம் தேதி இப்படம்  ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்