சனாதனத்தை ஒழிப்போம்; சட்டசபையில் உதயநிதி உரை
13 வைகாசி 2026 புதன் 12:59 | பார்வைகள் : 120
மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.
சட்டசபையில் இன்று (மே 12) சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அவரது இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது;
சட்டசபையில் நேற்று நாம் அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டோம். அதன் பின்னர், இன்று முதல் நடவடிக்கையாக சபாநாயகரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டசபையில் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அவைத் தலைவருக்கும், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சபாநாயகர் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். எல்லோரிடத்திலும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர் என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதே அவையில் 1980ம் ஆண்டுத் தேர்தலிலும் 2011 தேர்தலிலும் வெற்றி பெற்று சிறந்த சட்டசபை உறுப்பினராக பணியாற்றியிருக்கிறீர்கள்., அவையின் மரபுகளும் விதிகளும் உங்களுக்கு புதிதல்ல. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சேர்த்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சி உறுப்பினராக வந்துள்ளீர்கள்.
இந்த முறை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செயல்படுகின்ற ஒரு சபாநாயகராக நீங்கள் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பில் சிறப்பாகவும் நடுநிலையோடும் செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு. அதேபோல், எளிய பின்னணியில் இருந்து வந்து முதல் முறையாகச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி சங்கர் துணைத் தலைவராக உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த அவையை வழிநடத்துவார் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.
முதல்வர் நேற்று எங்கள் தலைவர் வீடுகளுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகளைப் பெற்றுவிட்டுச் சென்றார். அந்த அரசியல் நாகரீகம் இந்த அவையிலும் தொடர வேண்டும் என்பது எங்களது எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும். திமுக இந்தச் சட்டசபையில் எதிரி கட்சியாக மட்டும் இல்லாமல், ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும்.
இந்தப் சபைக்கு ஒரு வரலாறு உள்ளது. இன்று இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழகம் சிறப்பாக முன்னேறியிருக்கிறது என்றால், இங்கு நடந்த விவாதங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் காரணம். பிற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் இருந்த சபை. அப்படிப்பட்ட இந்த அவையில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சபாநாயகர் என்றைக்கும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.
நாம் இங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன்வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது. எங்கள் தலைவர் ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி சொல்லும் வார்த்தை “இது கழக அரசு அல்ல, நமது அரசு” என்பதுதான். அதை நிரூபித்தும் காட்டியுள்ளார். சென்ற திராவிட மாடல் அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகவே செயல்பட்டு வந்தது. ஆகவே, இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாக, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
சபாநாயகர், முதல்வர், நான் 3 பேரும் ஒரே கல்லூரியில் படித்த ஓல்ட் ஸ்டுடண்ட்ஸ். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும், அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச். 1967 லிலேயே ஆட்சிக்கு வந்தது திமுகதான். நாங்கள்தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். நமக்கு எப்போதும் தமிழகத்தின் நலன்தான் மிக முக்கியம். சபாநாயகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்கள் கையைப் பிடித்து அழைத்து வந்து இந்த இருக்கையில் அமர வைத்துள்ளோம்.
இனி இந்த இரண்டு தரப்பையும் நீங்கள்தான் கையைப் பிடித்து அரவணைத்து, கோபப்படாமல் வழி நடத்த வேண்டும். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களைக் கோபப்படுத்தும் வகையில் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். சட்டசபை ஜனநாயகத்தில் ஆளும் கட்சி கால்களாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில்தான் இந்த அவையின் பெருமை அடங்கியுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட ஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக அமைந்துள்ளது. அதுதான் இந்த அவையின் கூடுதல் சிறப்பு.
தமிழக மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியுள்ளனர். எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்தப் புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியுள்ளனர். ஆக, மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எங்களது பணிகள் நிச்சயம் இருக்கும். இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இது தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்துள்ளோம். அதற்கு ஆளும் கட்சியும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. எங்களது கருத்து என்னவென்றால், பாஜ ஆட்சிக்கு வந்திருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது 'வந்தே மாதரம்' பாடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் பாடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் யார் கவர்னராக அமர்ந்துள்ளார் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவர் இங்கு கவர்னராக இருந்த போது தமிழக சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என அவையின் உடைய மரபையே மாற்றச் சொன்னவர் தான் இன்று மேற்கு வங்க கவர்னராக உள்ளார்.
அடுத்து விரைவிலேயே இந்த அவையில் கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார். ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தத் தவறு மீண்டும் அவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. நாங்களும் அனுமதிக்க மாட்டோம். அவையில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் எந்த அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளிப் போக விடக்கூடாது. இந்த அரசு அதை அனுமதிக்கக் கூடாது என இங்கு கேட்டுக் கொள்கிறேன்.
வண்டிக்கு பிரேக் எப்படியோ, காளைக்கு மூக்கணாங்கயிறு எப்படியோ, அப்படித்தான் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சி என்று அண்ணாதுரை சொல்லியுள்ளார். அவர் சொன்ன வகையில் ஆளும் கட்சியின் செயல்பாட்டை கூர்ந்து நோக்கி, உங்களது நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயம் செயல்படுவோம். இந்த அவைக்குப் புதிதாக நிறைய எம்எல்ஏக்கள் வந்துள்ளீர்கள். அதில் மிகவும் மகிழ்ச்சி.
அதேபோல், அதிக ஆண்டுகளுக்குப் பின் நிறைய பெண் சட்டசபை உறுப்பினர்கள் இங்கு இடம் பெற்றுள்ளனர். அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. அத்தனை பேருக்கும் எங்களது வாழ்த்துகள். தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து இணைந்து பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி “எல்லோருக்கும் எல்லாம்” என்பதை உறுதி செய்யும் வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளும் கட்சிக்கு மக்கள் வழங்காவிட்டாலும், திமுக தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை இயக்க சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசிற்கும் முதல்வர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கு எனது நன்றி. உங்களது பணிகள் சிறக்கட்டும்
வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு. மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan