Paristamil Navigation Paristamil advert login

சபாநாயகராக பதவியேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்: நடுநிலையோடு செயல்பட கட்சிகள் வலியுறுத்தல்

சபாநாயகராக பதவியேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்: நடுநிலையோடு செயல்பட கட்சிகள் வலியுறுத்தல்

13 வைகாசி 2026 புதன் 09:52 | பார்வைகள் : 132


தமிழக சட்டசபை சபாநாயகராக, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு செய்யப்பட்டு, நேற்று பதவியேற்றார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெற்று, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வராக, த.வெ.க., தலைவர் விஜய், கடந்த 10ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட ஒன்பது எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் எம்.எல்.ஏ., கருப்பையா பதவி ஏற்றார். சட்டசபையின் முதல் கூட்டம், 11ம் தேதி நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 233 தொகுதி எம்.எல்.ஏ.,க்களும் பதவி ஏற்றனர்.

இதைதொடர்ந்து, இரண்டாவது நாளாக சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியது. முதல் நாள் கூட்டத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, ஆங்காங்கே அமரவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு நேற்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த சட்டசபை கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையிலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, ஆளும் கட்சியின் முதல் வரிசையில் இடங்கள் வழங்கப்பட்டன.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகவும், துறையூர் தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ., ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து, சபையின் முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர், ஜே.சி.டி.பிரபாகரை அழைத்து வந்து, சபை மரபுபடி, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர், சபாநாயகர், துணை சபாநாயகரை வாழ்த்தி, முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சட்டசபை கட்சி தலைவர்களான காங்கிரஸ் - ராஜேஷ்குமார், அ.ம.மு.க., - காமராஜ், வி.சி.க., - வன்னியரசு, பா.ம.க., - சவுமியா அன்புமணி, ம.தி.மு.க., - ராஜேந்திரன், தே.மு.தி.க., - பிரேமலதா, அ.தி.மு.க., - பழனிசாமி, வேலுமணி உள்ளிட்ட 17 பேர் பேசினர்.

சபாநாயகராக பொறுப்பேற்ற ஜே.சி.டி.பிரபாகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, சபையின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. மூன்றாவது நாளாக இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.