அதிமுக அணி ஆதரவை ஏற்ற விஜய்!
13 வைகாசி 2026 புதன் 06:31 | பார்வைகள் : 1599
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிரான அணியின் ஆதரவை முதல்வர் விஜய் ஏற்றிருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உதவிய கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வென்ற த.வெ.க.,விற்கு, ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சி ஓடோடி சென்று ஆதரவு அளித்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள், வி.சி.க., - முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததன் வாயிலாக, த.வெ.க., ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 28 பேர், வேலுமணி தலைமையில் த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், வி.சி., - கம்யூ., கட்சிகளின் ஆதரவு, த.வெ.க.,வுக்கு அவசியமில்லை என்றாகி விடுகிறது. இது குறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஆட்சி அமைக்க உதவிய வி.சி.க, - கம்யூ., கட்சிகளை, முதல்வர் விஜய் பெரிதும் மதிக்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களை முதல்வர் விஜய், நேரில் சென்று சந்தித்து நன்றி கூறி வருகிறார். எனினும், வி.சி.க., - கம்யூ., கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது, மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது போன்றுதான்.
உதாரணமாக, பதவி ஏற்பு விழாவில், 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டதற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி இருந்தால், த.வெ.க.,வால் சுதந்திரமாக ஆட்சி செய்ய முடியாது.இந்நிலையில், அ.தி.மு.க.,வின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்த ஆதரவை ஏற்க கூடாது என, வி.சி., - கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், ஆட்சியை சுதந்திரமாக நடத்த, விஜயின் கட்டுக்குள் இருக்கும் அ.தி.மு.க., அணியின் ஆதரவை ஏற்றால்தான் முடியும். எனவேதான், அந்த ஆதரவை விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உள்ள கூட்டணி கட்சியினரை சமாதானம் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan