Paristamil Navigation Paristamil advert login

உடனடியாக 717 மதுக்கடைகள்.. மூடல்! ; முதல்வர் விஜய் உத்தரவு

உடனடியாக 717 மதுக்கடைகள்.. மூடல்! ; முதல்வர் விஜய் உத்தரவு

13 வைகாசி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 162


தமிழகத்தில் உடனடியாக, 717 மதுக்கடைகளை மூடும்படி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,765 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைளை விற்கிறது. கடந்த, 2003 மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வழிபாட்டு தலம் அல்லது கல்வி நிலையங்களில் இருந்து, 50 மீட்டர் துாரத்திற்குள்ளும், பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்க கூடாது. குடியிருப்பு பகுதிகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள மது கடைகளை மூட, பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் இருந்து, 500 மீட்டர் துாரம் வரை அமைந்துள்ள, 717 மது கடைகளை இரு வாரங்களுக்குள் மூடும்படி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகில் இருந்து, 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு, முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.

அவரது உத்தரவுப்படி இந்த இடங்களில், 717 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொது மக்கள் நலன் கருதி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள, 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள, 186 கடைகள், பஸ் நிலையங்கள் அருகில் உள்ள, 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை, அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூடப்பட வேண்டிய கடைகளின் விபரங்களை, அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் கணக்கெடுத்து வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும், சென்னை, சேலம் மண்டலங்களில், தலா, 10 கடைகள், திருச்சி, மதுரை மண்டலங்களில், தலா ஒன்பது கடைகள், கோவை மண்டலத்தில், 12 கடைகள் என, மொத்தம், 50 கடைகள் மூடப்பட்டன.

இதுவரை, வழிபாட்டு தலம், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள மது கடைகள் மட்டுமே மூடப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக தற்போது, பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள மது கடைகளும் மூடப்படுகின்றன.

இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் நிலையங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பது, ரயில்கள், ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. பெண் பயணியரிடம் நகை, பணம் திருட்டு, ரயில்கள் மீது கல் வீசுவது போன்ற குற்றச் சம்பவங்களில், போதை ஆசாமிகள் ஈடுபடுகின்றனர்.

ரயில் நிலையங்களில் இருந்து, 10 முதல் 200 மீட்டர் துாரத்துக்குள் மட்டுமே, 39 டாஸ்மாக் கடைகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த கடைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலுார் மாவட்டங்களில் உள்ளன.

மது போதையில் ரயில், தண்டவாளத்தை கடப்போர், ரயில் மோதி இறந்து விடுகின்றனர். எனவே, ரயில் நிலையங்களுக்கு மிகவும் அருகில் உள்ள மது கடைகளை, தமிழக அரசு மூட வேண்டும். குறைந்தபட்சமாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுக்கடைகளை மூடும் உத்தரவை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் உட்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

மாற்று வேலை தர கோரிக்கை

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகர் கூறியதாவது: முதல்வர் விஜய் நடவடிக்கையை வரவேற்கிறோம். 23 ஆண்டுகளாக மது விற்பனை பிரிவில் பணிபுரிந்து வரும், 3,500 பணியாளர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு, அரசின் பிற துறைகளில் உள்ள வேலை வழங்க வேண்டும்.