Paristamil Navigation Paristamil advert login

ஸ்டாலின், வைகோவை வீட்டில் சென்று சந்தித்தார் விஜய்

ஸ்டாலின், வைகோவை வீட்டில் சென்று சந்தித்தார் விஜய்

12 வைகாசி 2026 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 140


திமுக தலைவர் ஸ்டாலினை மே 11 முதல்வர் விஜய் வீட்டில் சென்று சந்தித்து பேசினார். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது வீட்டில் சென்று விஜய் சந்தித்தார்.

தமிழக சட்டசபையில்  முதல்வர் விஜய் தலைமையிலான முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில், அவரை சந்தித்து பேசினார். முன்னதாக வீட்டுக்கு வந்த முதல்வரை, உதயநிதி வாசலில் நின்று ஆரத்தழுவி வரவேற்றார்.

வீட்டுக்குள் வந்த விஜயை, கட்டி அணைத்து ஸ்டாலின் வரவேற்றார்; பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பதிலுக்கு விஜய்யும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து ஸ்டாலின், விஜய், உதயநிதி, ஆனந்த் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். விஜய் வருகையின்போது முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்கே பன்னீர்செல்வம், மகேஷ் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். அவர்களும் விஜய்யை வரவேற்றனர்.

வைகோவுடன் சந்திப்பு

இதை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க விஜய் புறப்பட்டு சென்றார். வீட்டு வாசலிலேயே அவரை, துரை வைகோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார். வீட்டினுள் அவரை வரவேற்ற வைகோ, சற்று நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

வைகோவின் குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர், வீட்டு பணியாளர்கள் அனைவரும் விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரையும் வைகோ விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். பேசி முடித்து புறப்பட்ட முதல்வரை, வாசல் வரை வந்து வைகோ வழியனுப்பி வைத்தார்.

இதன் பிறகு பாமக தலைவர் அன்புமணியை சென்னை அக்கரையில் உள்ள அவரது வீட்டில் விஜய் சந்தித்தார். அவரை வரவேற்ற அன்புமணி -சவுமியா குடும்பத்தினர், முதல்வர் விஜய் உடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சென்று முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். விஜயை வாசல் வரை வந்து சீமான் வழி அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'முதல்வர் விஜய் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்' என சீமான் பதிவிட்டுள்ளார்.

அரசியல் நாகரிகம்

முதல்வர் விஜய் சந்திப்பு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜயுடனான சந்திப்பு குறித்து பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது;இந்த சந்திப்பு அவரின் அரசியல் பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. அதாவது தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை வளர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் இதில் வெளிப்படுகிறது. வெவ்வேறு கட்சி தலைவர்களை சந்தித்த விஜய், அதிமுக மற்றும் பாஜ கட்சிகளின் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு திருஷ்டி கழித்த பெண்

வைகோ வீட்டுக்கு முதல்வர் விஜய் இன்று சென்றார். அவரைக்கண்டதும், அங்கிருந்த பெண் ஒருவர், மகிழ்ச்சித் துள்ளலில் விஜய்க்கு திருஷ்டி கழித்த வீடியோ வைரல். அப்போது, 'இவங்கெல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க' என்று அவர்களை விஜய்யிடம் துரை வைகோ அறிமுகப்படுத்தினார்.