Paristamil Navigation Paristamil advert login

கேரள முதல்வர் பதவிக்கு காங்கிரசில்  போட்டா போட்டி!

கேரள முதல்வர் பதவிக்கு காங்கிரசில்  போட்டா போட்டி!

11 வைகாசி 2026 திங்கள் 01:05 | பார்வைகள் : 185


கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறி வருகிறது. முதல்வர் பதவிக்காக மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 102ல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதில், காங்., மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி, 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

கேரளாவில், 10 ஆண்டு களுக்கு பின் காங்., ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தற்போது அக்கட்சியில் முதல்வர் பதவியை பிடிப்பதில் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இவர்களின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என, ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி உள்ளார்.

அதே போல, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு இருப்பதால், முதல்வராக நியமிக்க வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கே.சி.வேணுகோபால் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

மறுபுறம், சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை முன்னெடுத்த விதம், மக்களின் ஆதரவை பெற்றது, மதச்சார்பற்ற நிலைப்பாடு ஆகியவற்றுக்காக, முதல்வர் பதவியை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன் கோருகிறார்.

மூன்று பேரும் போட்டி போடுவதால், முடிவு எடுக்க முடியாமல் காங்., மேலிடம் திணறி வருகிறது. இந்த சூழலில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடந்தது.

இதில், ராகுல், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன், கேரள காங்., மேலிட பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

முதல்வர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், வரும் 23-ம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும் காங்., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவை பொறுத்தவரை, காங்., அதிக இடங்களை வெல்லும் போதெல்லாம் இத்தகைய சிக்கல்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 1960, 2001-ல், காங்., 63 இடங்களை வென்ற போதும், உட்கட்சி பூசலால் முதல்வர்கள் மாற்றப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின.

கடந்த 1991-ல், கருணாகரன் பதவி விலகி அந்தோணி பதவியேற்றதும், அந்தோணிக்கும், கருணாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள், கட்சியின் வரலாற்றில் கசப்பான நினைவுகளாக உள்ளன.

தற்போது கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியை தக்கவைக்க, கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒருமனதாக முதல்வரை தேர்ந்தெடுக்க காங்., மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

டில்லியில், காங்., தேசிய தலைவர் கார்கே வீட்டில் ஆலோசனை கூட்டம் துவங்குவதற்கு முன்பே, கே.சி.வேணுகோபாலை ராகுல் தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை, கேரள முதல்வராக நியமிக்க ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கு வி.டி.சதீசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியில் தேசிய அளவிலான பதவியை பயன்படுத்தி, எம்.எல்.ஏ-.,க்கள் மத்தியில் தனித்தனி குழுக்களை உருவாக்கி, கே.சி.வேணுகோபால் அழுத்தம் கொடுப்பதாகவும், நென்மாரா, வடக்கஞ்சேரி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காங்., தோற்றதற்கு, கே.சி.வேணுகோபால் தான் காரணம் என்றும் ராகுலிடம் வி.டி.சதீஷன் குற்றஞ்சாட்டினார்.