Paristamil Navigation Paristamil advert login

மன்னாரிலிருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தாய் - மகள் மாயம்

மன்னாரிலிருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தாய் - மகள் மாயம்

9 வைகாசி 2026 சனி 17:23 | பார்வைகள் : 159


மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகளையும் மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளதாக அந்த தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளின் கணவர் தனது தாய்க்கு சுகயீனம் என கூறி கடந்த 2ஆம் திகதி அவரது சொந்த இடமான மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறி மன்னாரில் இருந்து தனது மகளையும் பேர பிள்ளையையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மன்னாரில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் மகளும் பேரப் பிள்ளையும் காணாமல்போயுள்ளனர்.

எனினும் தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளபோதும் தனது மகளும் பேரப்பிள்ளையும் அங்கு செல்லாத நிலையில் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாகவும் தொலைபேசியில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மகள் மற்றும் பேரப்பிள்ளை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.