Paristamil Navigation Paristamil advert login

வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு; சொல்கிறார் திருமாவளவன்

வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு;  சொல்கிறார் திருமாவளவன்

9 வைகாசி 2026 சனி 15:26 | பார்வைகள் : 202


தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு அளித்துள்ளோம். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம், என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2ல் வெற்றி பெற்றோம். அதேபோல, இடதுசாரிகள் கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. மக்கள் நலக் கூட்டணி தொடங்கியது முதல் இடதுசாரிகளும், விசிகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள சூழலில், இடதுசாரிகளும், விசிகவும் தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, இணைந்தே முடிவெடுப்போம் என்று கலந்து பேசி, அறிவிப்பு செய்திருந்தோம்.,

இடதுசாரி கட்சிகள் மாநிலக் குழுவில் எடுத்த முடிவுகளை அடுத்து, விசிக கூட்டத்தில் கலந்தாய்வு செய்து, அவர்களின் ஒப்புதலோடு, முடிவை அறிவிப்பதாக சொன்னோம். நேற்று இடதுசாரி கட்சிகள் தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தார்கள். அதனடிப்படையில் இணையவழி மூலமாக விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவருக்கு இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், தவெகவுக்கு ஆதரவு கடிதத்தை வழங்கினோம்.

தமிழகத்தில் இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் ஒரு சிக்கலில் தவெக திணறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஆட்சியமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டே காரணங்கள் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிகவின் நிலைப்பாடு தடையாக இருக்கக் கூடாது என்பதற்கும், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு அளித்துள்ளோம். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.  

நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான சூழலில், ஒரு முடிவை எடுப்பதற்கு, ஒரு அரசியல் கட்சி என்கிற முறையில் எங்களுக்கான சுதந்திரத்தை பயன்படுத்தி இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம். இது எந்த வகையிலும் எங்களின் உறவை பாதிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.