Paristamil Navigation Paristamil advert login

ஹன்டா வைரஸ் பாதிப்புக்குள்ளான உல்லாசக் கப்பல்... போராட்டத்தில் இறங்கிய கேனரி தீவுகள் மக்கள்

ஹன்டா வைரஸ் பாதிப்புக்குள்ளான உல்லாசக் கப்பல்... போராட்டத்தில் இறங்கிய கேனரி தீவுகள் மக்கள்

9 வைகாசி 2026 சனி 15:15 | பார்வைகள் : 329


ஹன்டா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒரு உல்லாசக் கப்பலின் வருகையை எதிர்த்து, டெனெரிஃப் பகுதி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் சுகாதாரத்துறை அதிகாரிகள் 140-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்களை வரவேற்கத் தயாரான நிலையிலேயே கோபத்தில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

எம்வி ஹோண்டியஸ் கப்பல் தீவில் நங்கூரமிட்டவுடன், கவனமான வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, பயணிகளை தனிமைப்படுத்துதலும் முன்னெடுக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை டெனரிஃபேயில் உள்ள கேனரி தீவுகளின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே டசின் கணக்கான உள்ளூர் மக்களும் துறைமுகத் தொழிலாளர்களும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டுமின்றி, கப்பல் வருவதற்கு முன்னதாக, கூடுதல் தகவல்களைக் கோரி பதாகைகளை ஏந்தியவாறும், விசில் ஊதியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் இருந்தனர்.

துறைமுக ஊழியர் ஒருவர் டெஹ்ரிவிக்கையில், நோய்த்தொற்று உள்ள கப்பல் ஒன்று நெருங்கும் போது, ​​சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளோ அல்லது தகவல்களோ இன்றி ஒரு துறைமுகத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படும் யோசனை எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது என்றார்.

இது தங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், பயணிகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுவார்கள் என்பதையும் உள்ளூர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுக்கு ஒரு உறுதிமொழி தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உல்லாசக் கப்பலின் வருகையைத் தடுப்பதாகச் சில போராட்டக்காரர்கள் மிரட்டியும் உள்ளனர்.

கேனரி தீவுகளின் ஜனாதிபதி பெர்னாண்டோ கிளாவிஜோ, டெனரிஃபேயில் உல்லாசக் கப்பலை நங்கூரமிட அனுமதிப்பதற்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே, அங்குள்ள மக்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது.

மேலும், கேனரி தீவு மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், அமைதி காக்கும் நடவடிக்கையைப் பேணுவதற்கும் போதுமான தகவல்கள் இல்லை என்றும் ஜனாதிபதி பெர்னாண்டோ கிளாவிஜோ கூறியுள்ளார்.

இதனிடையே, உல்லாசக் கப்பலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக விமானங்களை அனுப்ப அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கேனரி தீவுகளில் கப்பல் நங்கூரமிடும்போது, ​​சுமார் 22 பிரித்தானியப் பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களை இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) மற்றும் வெளிவிவகார அலுவலக அதிகாரிகள் வரவேற்று, அவர்களுக்கு ஹன்டா வைரஸ் பரிசோதனை செய்வார்கள் என கூறப்படுகிறது.

பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாதவர்கள், அன்றைய தினத்தின் பிற்பகுதியில் பிரித்தானியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வெளிவிவகார அலுவலகத்தின் தகவலின் அடிப்படையில், எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 30 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 22 பேர் இன்னும் கப்பலிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.