Paristamil Navigation Paristamil advert login

இரு இந்தியருக்கு ஹண்டா வைரஸ்?

இரு இந்தியருக்கு ஹண்டா வைரஸ்?

9 வைகாசி 2026 சனி 07:29 | பார்வைகள் : 233


வைரஸ் பாதிப்புக்குள்ளான சொகுசு சுற்றுலா கப்பல் குழுவில், இரு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த, 'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான, 'எம்.வி., ஹோண்டியஸ்' என்ற ஆடம்பர சொகுசு டச்சு கப்பல், ஏப்., 1ல் அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணத்தை தொடங்கியது.

இது, ஸ்பெயினின் கேனரி தீவை நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அந்த கப்பலில் இருந்த பல பயணியருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அது எலிகள் மூலம் பரவக்கூடிய ஹண்டா வைரஸ் என்பது கண்டறியப் பட்டது.

இதுவரை ஐந்து பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்  ஒருவர் என, இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கப்பல் குழுவில் பணியாற்றி வரும் இரு இந்தியர்களுக்கு தொற்று அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கப்பலில் இருந்த 40 பயணியர், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட செயின்ட் ஹெலினா தீவில் இறக்கி விடப்பட்டனர்.

ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த அவர்களை, அந்தந்த நாட்டு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: கப்பல்கள், கிடங்குகள், சேமிப்பு வசதிகள் மற்றும் போதிய காற்றோட்டம் இல்லாத இடங்களில் எலிகள் நடமாட்டம் அதிகமுள்ள சூழலில், அவற்றின் சிறுநீர், எச்சங்கள் அல்லது உமிழ்நீரில் இருந்து காற்றில் பரவும் வைரஸ் துகள்களை சுவாசிப்பதால், ஹண்டா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வகைப்படுத்தப்பட்ட இத்தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது அசாதாரணமானது.

ஆனால், 'ஆண்டிஸ்' வைரஸ் போன்ற சில தென் அமெரிக்க வகைகளில் மட்டுமே மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய தொற்று பரவல் ஒரு தீவிரமான சம்பவம் என்றாலும், உலகளாவிய பொது சுகாதார அபாயம் குறைவு. மேலும், பாதிக்கப்பட்ட கப்பலில் உள்ளவர்களின் தொடர்புகளை கண்டறிந்து, அவர்களை கண்காணிக்கும் பணிகளில் சர்வதேச சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொற்று அபாயம் இல்லை

வைரஸ் பாதிப்புக்கு உள்ளான கப்பல் குழுவில் இருந்த இரு இந்தியர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தனிநபர் சார்ந்ததாக இருப்பதால், அங்கிருந்து இந்தியாவுக்கு தொற்று பரவும் அபாயம் தற்போதைக்கு இல்லை என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.