Paristamil Navigation Paristamil advert login

RSA உதவித் தொகை - தகுதி இருந்தும் விண்ணப்பிக்காத குடும்பங்கள் அதிகரிப்பு!!

RSA உதவித் தொகை - தகுதி இருந்தும் விண்ணப்பிக்காத குடும்பங்கள் அதிகரிப்பு!!

7 வைகாசி 2026 வியாழன் 21:41 | பார்வைகள் : 297


சமூக நல உதவித் திட்டங்கள் ஏராளமாக இருந்தாலும், அவற்றைப் பற்றிய தகவல் பற்றாக்குறையால் பலர் உதவித் தொகைகளை பெறாமல் தவறவிட்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் RSA உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்ற குடும்பங்களில் சுமார் 33 முதல் 37 சதவீதம் வரை விண்ணப்பிக்கவில்லை என பிரான்ஸ் அரசின் ஆய்வு அமைப்பான Drees வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் இறுதிக்காலத்தில் மட்டும் சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் குடும்பங்கள் இந்த உதவியை பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த உதவிகளை பெறாமல் உள்ளவர்களில் பலர் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள், உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதாந்திரமாக கிடைக்கக்கூடிய உதவித் தொகை குறைவாக இருப்பதாலும், நிர்வாக நடைமுறைகள் சிக்கலாக இருப்பதாலும் பலர் விண்ணப்பிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் பிரான்சில் சுமார் 10 பில்லியன் யூரோ மதிப்பிலான சமூக உதவித் தொகைகள் மக்களால் கோரப்படாமல் விடப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை அறிய அரசாங்கம் பல இணைய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

“mesdroitssociaux.gouv.fr” என்ற இணையதளம் மூலம் பல்வேறு சமூக உதவிகளை ஒரே இடத்தில் சரிபார்க்க முடியும். அதேபோல், “France Services” மற்றும் நகராட்சிகளின் “CCAS” மையங்கள் இலவச ஆலோசனை மற்றும் விண்ணப்ப உதவிகளையும் வழங்குகின்றன. சமூக நல உதவிகளை தவறவிடாமல் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.